திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக 1,800 டன் நெல் சரக்கு ரெயிலில் அனுப்பி வைப்பு

திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக சரக்கு ரெயிலில் 1,800 டன் நெல் அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2020-12-23 01:17 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்த நெல் மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

அதேபோல நெல் மூட்டைகள் சரக்கு ரெயில்கள் மூலம் பிற மாவட்டங்களில் உள்ள அரவை ஆலைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டுக்கு அனுப்பி வைப்பு

இந்த நிலையில் நேற்று திருவாரூரில் இருந்து ஈரோட்டுக்கு அரவைக்காக 1,800 டன் நெல் மூட்டைகளை அனுப்பி வைக்கும் பணி நடந்தது. இதையொட்டி திருவாரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டது.

அங்கு லாரிகளில் இருந்து நெல் மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சரக்கு ரெயிலின் 50 பெட்டிகளில் அடுக்கி வைத்தனர். பின்னர் சரக்கு ரெயில் 1,800 டன் நெல் மூட்டைகளுடன் ஈரோடு புறப்பட்டு சென்றது.

மேலும் செய்திகள்