புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும் - கமல்ஹாசன் பேச்சு

புதுச்சேரியில் வருகிற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.;

Update: 2020-12-23 00:58 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி கம்பன் கலையரங்கில் மக்கள் நீதி மய்யம் சார்பில் தொகுதி வாரியாக ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் கட்சியில் இணையும் விழா நேற்று மாலை நடந்தது.

விழாவில் சிறப்பு விருந்தினராக மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்துகொண்டு பெண்களுக்கு தையல் எந்திரம், சலவை தொழிலாளிகளுக்கு இஸ்திரி பெட்டி, சவர தொழிலாளிகளுக்கு முடிதிருத்தும் உபகரணம், சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு புத்தகம், ஏழை மாணவர்களுக்கு அரசு பணி தேர்வுக்கான புத்தகங்கள் ஆகியவற்றை வழங்கினார்.

கமல்ஹாசன் முன்னிலையில் சேரன், ருத்ரகுமார் ஆகியோர் தலைமையிலும் (அரியாங்குப்பம் தொகுதி), சோமநாதன் (ஏம்பலம்), துரை ரமேஷ் (திருபுவனை), மணிவேல் (ஊசுடு) ஆகியோர் தலைமையில் ஏராளமானோர் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தனர். மேலும் கடலூர் மாவட்டத்தில் இருந்து வக்கீல்கள் நவீன்ராஜ் தலைமையிலும் கட்சியில் இணைந்தனர். கட்சியில் இணைந்தவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

புதுவை அரசியல் வரலாற்றில் இது ஒரு பெரும் புரட்சி. புதியதோர் புதுவை செய்வோம் என்ற மக்கள் நீதி மய்யத்தின் நீண்ட நாள் கனவு இவ்விழாவில் நிறைவேறப் போகிறது. தமிழகம், புதுச்சேரி நிர்வாக ரீதியில் வெவ்வேறு மாநிலமாக இருந்தாலும் மொழி, இனம், பண்பாட்டால் நாம் அனைவரும் தமிழர்கள்.

புதுவையை ஊழல் பேர் வழிகள், ரவுடிகள் மாறிமாறி அதிகாரத்தை கைப்பற்றி சீரழித்துவிட்டார்கள். அதற்கு உதாரணமாக புதுவை மாநிலம் தற்கொலை விழுக்காட்டில் தேசிய அளவை மிஞ்சி இருக்கிறது.

புதுவை சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடும். புதுவையை முன்மாதிரி மாநிலமாக மாற்றி காட்டுவேன். புதுச்சேரியை உலக வரைபடத்தில் இடம் பெற செய்யும் தகுதி மக்கள் நீதி மய்யத்திற்கு உள்ளது. அதற்கான புதிய படை எங்களுடன் இணைந்துள்ளது. புதிதாக வந்தவர்களை வரவேற்கிறேன். மக்கள் நீதி மய்யம் வருங்காலத்தில் பெரும் விருட்சமாக மாறும். இந்த எழுச்சியை பயன்படுத்தி கொள்ள வேண்டும். மக்களுக்கு சேவை செய்ய நான் காத்திருக்கிறேன். ஊர்கூடி தேர் இழுத்தால் நாளை நமதே.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் மக்கள் நீதி மய்யத்தின் தமிழ்நாடு இளைஞர் அணி தலைவரும், புதுவை பொறுப்பாளருமான சினேகன், நிர்வாகி தங்கவேல் மற்றும் தொழிலதிபர் ராஜேந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். அரியாங்குப்பம் தொகுதி மாதவன், பாலா, குணா, மணிகண்டன், ஆனந்த் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

மேலும் செய்திகள்