சென்னை மாநகராட்சியில் சொத்து வரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணம் - ஜனவரி 1-ந்தேதி முதல் வசூலிக்கப்படும்
பெருநகர சென்னை மாநகராட்சியில் ஜனவரி 1-ந்தேதி முதல் சொத்துவரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணமும் சேர்த்து வசூலிக்கப்படும் என மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கட்டிடங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களுக்கு சொத்துவரி மற்றும் தொழில்வரி 2 தவணையாக வசூலிக்கப்படுகிறது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலும், அக்டோபர் முதல் மார்ச் மாதம் வரையிலும் என 2 அரையாண்டுகளாக வரி வசூலிக்கப்படுகிறது. இந்த வரியை தொடக்க மாதத்தின் முதல் 15 நாட்களுக்குள் கட்டிவிட வேண்டும் என்பது விதிமுறை ஆகும்.
இந்தநிலையில் அடுத்த ஆண்டில் இருந்து சொத்துவரியுடன் திடக்கழிவு மேலாண்மை கட்டணமும் இணைக்கப்பட இருக்கிறது.
இதுகுறித்து பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திடக்கழிவு மேலாண்மை விதிகளின்படி, பெருநகர சென்னை மாநகராட்சியால் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் (2019) இயற்றப்பட்டுள்ளது.
இதற்காக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலம் தமிழக அரசின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்தத் திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின்படி கழிவு உருவாக்குபவர்கள் வகைப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப திடக்கழிவு மேலாண்மைக்கான பயனாளர் கட்டணத்தை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும் என்பதால், இதனை சொத்துவரியுடன் சேர்த்து ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திடக்கழிவு மேலாண்மை பயனாளர் கட்டண விவரங்கள் பெருநகர சென்னை மாநகராட்சியின் www.chennaicorporation.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் அட்டவணை 1-ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.