குளு குளு ஏ.சி. வசதியுடன் கன்டெய்னரில் ‘அம்மா மினி கிளினிக்’ - சென்னை மாநகராட்சி புதிய முயற்சி
சென்னை மாநகராட்சி புதிய முயற்சியாக கன்டெய்னரில் குளு குளு ஏ.சி.வசதியுடன் அம்மா மினி கிளினிக்கை அமைத்து உள்ளது.
திருவொற்றியூர்,
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் அவர்கள் வசிக்கும் இடத்திலேயே காலவிரயம் இன்றி கட்டணம் இன்றி மருத்துவ சிகிச்சை பெறும் வகையில் தமிழகத்தில் 2 ஆயிரம் அம்மா மினி கிளிக்குகள் தொடங்க திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் சென்னை ராயபுரம், வியாசர்பாடியில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மினி கிளினிக்குகளை திறந்துவைத்தார். இந்த கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதார பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இடம் பெற்றிருக்கும்.
இந்த நிலையில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு உட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு குடிசை பகுதியில் அம்மா மினி கிளினிக் அமைக்க கட்டிட வசதி இல்லை. இதனால் புதிய முயற்சியாக கன்டெய்னரில் அம்மா கிளினிக்கை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது.
சுமார் 20 அடி நீளம் கொண்ட கன்டெய்னரை இதற்கான மாற்றியுள்ளனர். அதில் குளுகுளு ஏ.சி. வசதி, டாக்டர் சிகிச்சை அளிக்க தனி அறை, மருந்து பொருட்கள் வைக்க தனி அறை என உயர்தரத்தில் மாற்றி அமைத்துள்ளனர். அதன் உள்ளே சென்றால் கன்டெய்னர் என்ற எண்ணமே வராத அளவிற்கு ஆஸ்பத்திரியாக முழுவதும் மாற்றப்பட்டு உள்ளது.
மேலும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் அமருவதற்காக தனி அறையும், பயோ கழிவறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. ரூ.4 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ‘அம்மா மினி கிளினிக்’கை மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவர் ஆர்.எஸ் ராஜேஷ், கூடுதல் மாநகர சுகாதார அலுவலர் லஷ்மி, மாநகராட்சி மண்டல அலுவலர் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.