குன்றத்தூர் அருகே மின்சாரம் தாக்கி 2 பேர் சாவு

குன்றத்தூர் அருகே தொழிற்சாலை ஷெட்டர் பராமரிப்பு பணிக்கு வந்தபோது மின்சாரம் தாக்கி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2020-12-22 19:00 GMT
பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரை அடுத்த திருமுடிவாக்கம், சிப்காட்டில் பிளாஸ்டிக் மோல்டிங் செய்யும் தனியாருக்கு சொந்தமான தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்கு ஷெட்டர் பராமரிப்பு பணிக்காக அனகாபுத்தூரை சேர்ந்த அற்புதகுமார் என்பவர் அதே பகுதியை சேர்ந்த முருகன் (40), நாகராஜ் (39), ஆனந்த் (41) ஆகியோரை பணிக்கு அழைத்து வந்தார்.

கடந்த 2 நாட்களாக பணிகள் நடந்து வந்த நிலையில் நேற்று காலை 3 பேரும் வழக் கம் போல் வேலைக்கு வந்தனர். 20 அடி உயரம் கொண்ட இரும்பு ஏணியை தொழிற்சாலைக்குள் இருந்து ஷெட்டரை பராமரிப்பதற்காக வெளியே கொண்டு வந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக தொழிற்சாலைக்கு வெளியே சென்று கொண்டிருந்த உயர் அழுத்த மின்சார வயர் இரும்பு ஏணி மீது உரசியதில் மின்சாரம் தாக்கியது.

இதில் ஆனந்த் தூக்கி வீசப்பட்டு லேசான காயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முருகன், நாகராஜ் இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார் கள். இந்த சம்பவத்தையடுத்து மின் வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின் இணைப்பை துண்டித்தனர். இதையடுத்து குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் வந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வேலைக்கு அழைத்து வந்த அற்புதகுமார் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் மின்சாரம் தாக்கி 2 பேர் இறந்து போனதையடுத்து அங்கு பணிபுரிந்த ஏராளமான ஊழியர்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் பல இடங்களில் மிகவும் தாழ்வாக மின்சார வயர்கள் செல்வதால் அடிக்கடி மின் விபத்துகள் ஏற்படுவதாக ஊழியர்களும் பொதுமக்களும் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் செய்திகள்