துபாயில் இருந்து சென்னைக்கு கடத்தல்; ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல் - 5 பேர் கைது

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வரப்பட்ட ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2020-12-22 18:52 GMT
ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் இருந்து வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த சையத் முசுரூதீன் (வயது 48), ராமநாதபுரத்தை சேர்ந்த கலந்தர் பக்ரூதீன் (29), சாகுல் அமீது (38), பத்ரூதீன் (48), தூத்துக்குடியை சேர்ந்த தமீம் அன்சாரி (36) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது உள்ளாடை மற்றும் சட்டை ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அதேபோல் விளையாட்டு பொருட்களில் தங்க தகடுகளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து 5 பேரிடம் இருந்து ரூ.68 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 350 கிராம் தங்கத்தை கைப்பற்றினர். மேலும், துபாயில் இருந்து வந்த விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்புள்ள 350 கிராம் தங்கத்தையும் கைப்பற்றினார்கள். அதேபோல் துபாயில் வந்த விமானத்தில் பயணம் செய்த ராமநாதபுரத்தை சேர்ந்த சர்புதீன் அப்துல் மஜீத் (40), முகமது ரகமத்துல்லா (36) ஆகியோரின் உடைமைகளை சோதனை செய்தபோது ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ கைப்பற்றப்பட்டது.

ஒரே நாளில் சுங்க இலாகா நடத்திய சோதனையில் ரூ.87 லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கமும், ரூ.10 லட்சம் மதிப்புள்ள 4 கிலோ குங்குமப்பூ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தங்கத்தை கடத்திய 5 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்