திண்டிவனம்- நகரி அகல ரெயில்பாதை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும்; கமல்ஹாசன் பேச்சு

திண்டிவனம்- நகரி அகல ரெயில்பாதை திட்ட பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று செய்யாறில் நடந்த மக்கள் நீதி மய்ய கூட்டத்தில் கமல்ஹாசன் பேசினார்.

Update: 2020-12-22 06:32 GMT
சிறுவர்களின் சிலம்பாட்டத்தை மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசன் பார்த்து ரசித்த போது எடுத்த படம்.
பொதுமக்கள் சந்திப்பு கூட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் நிர்வாகிகள் ஆலோசனை மற்றும் பொதுமக்கள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கவிஞர் சினேகன் வரவேற்று பேசினார்.

இதில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் கலந்து கொண்டு பேசியதாவது:-

மறந்துவிட்டோம்
நெசவுத்தொழில், விவசாயம், மண்பாண்ட தொழில் அதையெல்லாம் வேண்டாம் என நவீனத்தை நோக்கி நடைபோட்டு விட்டோம். மண்ணை வணங்க மறந்துவிட்டோம், நீரை வணங்க மறந்துவிட்டோம், மனிதனை வணங்குகிறோம். ஆட்சியில் இருப்பவர்களை பார்த்து பயந்து வணங்கிறோம். இதை மாற்றி அமைக்கும் புது கலாசாரமாக, அரசியல் கலாசாரமாக மக்கள் நீதி மய்யம் உங்கள் மடியில் தவழ்ந்து கொண்டிருக்கிறது. இங்கே தன்மானம் உள்ளவர்கள் தான் கூட்டமாக சேர்ந்திருக்கிறோம்.

அதுமட்டுமல்ல தனக்கென்று சுயமரியாதை இருப்பது போன்று மற்றவர்களிடம் இருக்கும் மரியாதையை பார்ப்பதல்ல, அனைவரின் மரியாதையும் காக்கப்பட வேண்டும். எனது மரியாதை நான் காத்துகொள்ளுவதற்கான முதல் அடி நேர்மை தான். தமிழ்நாட்டில் மக்களுக்கு துரோகம் இழைத்து கொண்டிருப்பவர்களுக்கு கிடைக்க போகும் முதல் அடி எங்களுடையது தான். நாங்கள் சொல்வதற்கு எல்லாம் பதில் பேசி வருகிறார்கள்.

வெள்ளை அறிக்கை
நேர்மை இருந்தால் இதற்கும் பதில் கூறுங்கள். இங்கே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றாமல் இருப்பதற்கு நிதி பற்றாக்குறை என்று தான் சொல்லியிருப்பார்கள். மத்தியில் இருந்து நிதி வரவில்லை என்று கூறுவார்கள். உங்களுக்கும் தமிழக அரசிற்கும் மத்தியில் காணாமல் போன பணம் இருந்தால் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றிடலாம். மக்கள் நீதி மய்யம் 7 அம்ச திட்டங்களை செயல்படுத்த இருக்கிறோம். பண பலம் உள்ளவர்கள் மக்களுக்கு சேவை செய்ய மக்கள் நீதி மய்யத்தில் இருக்கிறார்கள், பணம் சம்பாதிக்க வந்தவர்கள் இல்லை.

என்னிடம் கேட்கின்றனர் நீங்கள் வருமான வரி கட்டி இருக்கிறீர்களா என்றும், அத்தாட்சி ஏதாவது இருக்கிறதா? வெள்ைள அறிக்கை காட்ட முடியுமா என்று, அதே கேள்வியை அமைச்சர் கடம்பூர் ராஜூவிடம் கேட்கிறேன். நான் டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் சம்பளம் வாங்குகிறேன், இல்லை என்று சொல்லவில்லை. இதில் எதுவுமே சூழ்ச்சி கிடையாது.

ஆனால் ஒரு சாதாரண விடுதி வைத்துக்கொண்டிருந்தவர் இன்று பணத்தில் புரண்டு கொண்டிருக்கிறார். அதற்கு வெள்ளை அறிக்கை கொடுக்க முடியுமா?.

ஊழல் இருக்காது
எங்கள் கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சரியாக இயங்கவில்லை என்ற புகார் நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவியை ராஜினாமா செய்யும் ஒப்பந்தத்துடன் நான் வேட்பாளரை தேர்வு செய்வேன். நீங்கள் வந்துவிட்டால் ஊழலே இருக்காதா என்றால் கண்டிப்பாக இருக்காது.

தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் வேலையில் இருந்து தூக்கிவிடுவார் என்கிற பயம் இருந்தால் தன்னாலே ஒடுங்குவார்கள். அவர்களை ஒடுக்குவதற்கு நாங்கள் வரவில்லை, அவர்களை திருத்துவதற்காகவும், மாற்றுவதற்காகவும் தான் வந்திருக்கிறோம். அவர்களும் தமிழகத்தின் பிள்ளைதான். இப்படி வாழ்ந்தால் தான் வாழ முடியும் என்கிற அவநம்பிக்கையை, ஒரு கெட்ட எண்ணத்தை நினைத்து வாழ்பவர்கள் காணாமல் போவார்கள்.

அகல ரெயில்பாதை பணி
நீர்நிலை பராமரிப்புகள் அசுரவேகத்தில் நடக்கும். திண்டிவனம் - நகரி அகல ெரயில்பாதை திட்டத்தை விரைவாக முடிக்க பணிகள் முடுக்கிவிடப்படும். சிப்காட் வளாகத்தில் மேலும் பல தொழிற்சாலைகள் உங்கள் அனுமதியோடு உருவாக்கப்படும். பாலாற்றில் மணல்கொள்ளை நிறுத்தப்படும். அது உங்கள் சொத்து, என் சொத்து அதில் யாரும் கை வைக்கமுடியாது. அது உலகின் சொத்து. இந்த உலகில் நரகம் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அது அரசு ஆஸ்பத்திரி தான். அதனை சீரமைக்க வேண்டும்.

வித்தியாசமான வாக்குறுதி
எங்கள் பட்டியலில் பொறியாளர்கள், டாக்டர்கள் என படித்தவர்களும், உங்களுக்கு நடக்கும் கொடுமைகளை பார்த்து கோபப்பட்டவர்களும் இங்கே நிறைய பேர் இருக்கிறார்கள். ஒரு வருடத்தில் செய்து காட்டக் கூடிய பல விஷயங்கள் இருக்கிறது. வரும் வழியில் ஒருவர் சொன்னார், இறங்கி நடங்கள் என்றதும் நான் யோசித்தேன்.

இந்த கோவிட் காலத்தில் அவர்கள் நிற்கிறார்களே? நாம் நின்றால் என்ன? திடீரென்று ஒரு யோசனை. ஆட்சிக்கு வந்து 6 மாதத்திலோ அல்லது ஒரு வருடத்திலோ சாக்கடை மாதிரி இருக்கிற அந்த இடத்தில் நான் அங்கபிரதட்சணம் செய்வேன், உருண்டு வருவேன். இது என்ன வித்தியாசமான வாக்குறுதியாக இருக்கிறதே என்று நினைக்கிறீர்களா?. நான் உருளும் அந்த தெரு, நீங்கள் நடப்பதற்கு தகுதியான தெரு என்கிற சான்றிதழ். அதை நிரூபிக்கும் தருணம் வெகுவிரைவில் வரும்,

இவ்வாறு அவர் பேசினார். .

நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

கீழ்பென்னாத்தூர்

இதைத்தொடர்ந்து செஞ்சி வழியாக இரவு 7 மணிக்கு கீழ்பென்னாத்தூர் வந்தார். அங்கு போலீஸ் ஸ்டேஷன் எதிரில் திறந்த வேனில் நின்றவாறு 2 நிமிடம் நாலாபுறமும் திரும்பியவாறு பொதுமக்களைப் பார்த்து கைகூப்பி வணங்கினார். இதனையடுத்து கமல்ஹாசன் திருவண்ணாமலையில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக புறப்பட்டு சென்றார்.

கீழ்பென்னாத்தூரில் மாலையில் இருந்து 2 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்த பொதுமக்களும், ரசிகர்களும் கமலஹாசன் பேசாமல் சென்றதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

முன்னதாக மாவட்ட எல்லையில் அவரை திருவண்ணாமலை மாவட்ட தலைவர் இரா.அருள் தலைமையில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

மேலும் செய்திகள்