சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தாிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.;

Update: 2020-12-22 06:20 GMT
அண்ணாமலைநகர்,

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் ஆனித்திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த ஆண்டு மார்கழி மாதத்தையொட்டி ஆருத்ரா தாிசன விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 6 மணி அளவில் கோவில் கொடிமரம் அருகே பஞ்சமூர்த்திகள் எழுந்தருளினர்.

கொடியேற்றம்

இதனை தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டன. பின்னர் மேளதாளம் முழங்க காலை 6.45 மணியளவில் கோவில் கொடிமரத்தில், உற்சவ ஆச்சாரியார் சர்வேஸ்வர தீட்சிதர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடி மரத்திற்கும், பஞ்சமூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து பஞ்ச மூர்த்திகள் பிரகாரத்தை வலம் வந்து, வீதிஉலா சென்றனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

29-ந் தேதி தேர்த்திருவிழா

ஆருத்ரா தரிசன கொடியேற்ற நிகழ்ச்சியையொட்டி சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

முக்கிய விழாவான தேர்த்திருவிழா வருகிற 29-ந் தேதியும், 30-ந் தேதி ஆருத்ரா தரிசன விழாவும் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்