9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில்; வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
பேரணாம்பட்டு அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கட்டிட மேஸ்திரிக்கு 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து வேலூர் சிறப்பு போக்சோ கோர்ட்டு நீதிபதி தீர்ப்பு கூறினார்.
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு
பேரணாம்பட்டு தாலுகா மேல்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), கட்டிட மேஸ்திரி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ந் தேதி தெருவில் விளையாடிக்கொண்டிருந்த 9 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதனால் பயந்து போன சிறுமி கதறி அழுதுள்ளார்.
அவரின் அழுகுரல் கேட்டு சிறுமியின் பெற்றோர் மற்றும் அப்பகுதி மக்கள் அங்கு சென்றனர். அப்போது மணிகண்டன் இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என்று சிறுமிக்கு மிரட்டல் விடுத்து தப்பி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் குடியாத்தம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மணிகண்டனை கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
10 ஆண்டு ஜெயில்
இந்த வழக்கின் விசாரணை வேலூர் சத்துவாச்சாரியில் இயங்கும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று வழக்கின் இறுதி கட்ட விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வக்கீல் அமுதா ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் நீதிபதி செல்வம் கேட்டறிந்து தீர்ப்பு கூறினார்.
அதில், சிறுமியை கடத்தி சென்று பாலியல் தொந்தரவு கொடுத்த மணிகண்டனுக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 10 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.6 ஆயிரம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார்.
அதைத்தொடர்ந்து பலத்த போலீஸ் காவலுடன் மணிகண்டன் வேனில் அழைத்து செல்லப்பட்டு வேலூர் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.