தேனி மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் மின்வாரிய ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

தமிழகம் முழுவதும் மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-22 05:13 GMT
தேனி,

தமிழகத்தில் மின்வாரிய பராமரிப்பு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் உரிமை வழங்குவதாக மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும் மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி மின்வாரிய ஊழியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்துக்கு மின்வாரிய ஊழியர்கள், தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானவர்கள் நேற்று காலை 10 மணியளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் சுமார் 1,100 ஊழியர்கள் உள்ளனர். அவர்களில் 700-க்கும் மேற்பட்டவர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த போராட்டத்துக்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்க மாநில துணைத்தலைவர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். எல்.பி.எப். தொழிற்சங்க திட்ட செயலாளர் திருமுருகன், மின்வாரிய ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் மூக்கையா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு மின்வாரியத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டம் எதிரொலியாக காலையில் அலுவலகத்துக்குள் அதிகாரிகள் யாரும் செல்ல முடியவில்லை. சுமார் 1 மணி நேரம் அதிகாரிகள் வெளியே காத்திருந்தனர். அதன்பிறகு அதிகாரிகள் அலுவலகத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனால், அவர்கள் பணிகளை செய்ய போராட்டக்காரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அலுவலக பணிகள் முடங்கின. தொடர்ந்து மாலை வரை போராட்டத்தை தொடர்ந்தனர்.

மேலும் செய்திகள்