2 முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சேலம் ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை

சேலத்தில் 2 முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட, ஆயுதப்படை போலீஸ்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2020-12-22 04:01 GMT
சேலம்,

சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள குள்ளமுடையார் காட்டூரை சேர்ந்தவர் பாலாஜி (வயது 32). இவர் சேலம் மாவட்ட ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி அனிதா.

இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. கணவன், மனைவி இருவரும் சேலம் குமாரசாமிப்பட்டியில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

குழந்தை இல்லாததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

2 முறை பணி இடைநீக்கம்

மேலும் பாலாஜி, போலீஸ் வாகனத்தை ஓட்டிச்சென்ற போது விபத்து ஏற்பட்டதை அடுத்து பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் பணிக்கு திரும்பிய அவர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை பணியில் இருந்த போது தாக்கியதாக எழுந்த புகாரின் பேரில் மீண்டும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

ஒருபுறம் பணி இடைநீக்கம் மற்றொரு புறம் மனைவியிடம் தகராறு காரணமாக அவர் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அனிதா நேற்று முன்தினம் இரவு வீட்டில் உள்ள ஒரு அறையில் தூங்கி உள்ளார். நேற்று காலை அவர் எழுந்து தனது அறை கதவை திறக்க முயன்றபோது கதவு வெளிப்புறமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருப்பது தெரியவந்தது.

துப்பட்டா அறுந்தது

இதையடுத்து அவர் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தம் கேட்டு பக்கத்து வீட்டில் வசிக்கும் போலீஸ்காரர்கள் அங்கு வந்தனர். அப்போது பாலாஜி வீட்டின் பிரதான வாசல் கதவு திறந்து இருந்தது. உடனே வீட்டுக்குள் வந்த அவர்கள் அனிதாவின் அறை கதவை திறந்தனர்.

அதன்பிறகு வெளியே வந்த அனிதா, கணவர் பாலாஜி தூங்கி கொண்டு இருந்த மற்றொரு அறைக்கு சென்று பார்த்தார். அங்கு மின்விசிறியில் துப்பட்டாவால் தூக்குப்போட்டு துணி அறுந்து விழுந்த நிலையில், கணவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

சஸ்பெண்டு

இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்தம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜி எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட பாலாஜி, 2 முறை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டு உள்ளார். மேலும் அவருக்கு குழந்தை இல்லை. இதனால் மனவேதனையில் இருந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. மனைவியின் துப்பட்டாவால் தூக்குப்போட்டு, வெகுநேரமாகியதால் துப்பட்டா அறுந்து அவரது உடல் கீழே விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்