வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கொலை: தந்தை-மகன் உள்பட 5 பேர் கைது பரபரப்பு தகவல்கள்

ஓசூர் அருகே வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தந்தை -மகன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியானது.

Update: 2020-12-22 03:11 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே நஞ்சாபுரத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2 பேர் நேற்று முன்தினம் இரவு கொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தினர்.

இதில் கொலையானவர்கள் மத்திய பிரதேச மாநிலம் பேலுக்காபுரா பகுதியைச் சேர்ந்த பிர்கேஷ் (வயது 22), பிஜய்சிங் (28) என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் கிடைத்த பரபரப்பு தகவல்கள் வருமாறு:-

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் அரவிந்த் ஜாடவ். இவர் ஓசூரில் எழில் நகரில் குடியிருந்து வருகிறார். மேலும் டைல்ஸ், மார்பிள்ஸ் ஒட்டும் தொழில் செய்து வந்தார். அரவிந்த் ஜாடவ் ஓசூரில் நஞ்சாபுரத்தில் ஆஞ்சநேயர் கோவில் பின்புறம் நிலம் வாங்கி உள்ளார். அங்கு தற்போது வீடு கட்டி வருகிறார்.

மது குடித்தனர்

இந்த வீடு கட்டும் பணிக்காக மத்திய பிரதேச மாநிலம் பேலுக்காபுரா பகுதியைச் சேர்ந்த பிர்கேஷ் (22), அவருடைய அண்ணன் ராஜ்குமார் (25), பிஜய்சிங் (28) மற்றும் சில தொழிலாளர்கள் ஓசூர் வந்துள்ளனர். அவர்கள் அரவிந்த் ஜாடவ்வின் வீட்டை கட்டும் பணியை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் பிர்கேஷ், ராஜ்குமார், பிஜய்சிங் உள்பட 6 வடமாநில தொழிலாளர்கள் நஞ்சாபுரம் ஆஞ்சநேயர் கோவில் அருகில் சாலையில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்தனர்.

சரமாரியாக தாக்குதல்

அப்போது பாகலூர் லிங்காபுரத்தைச் சேர்ந்த பவன்குமார் (22), தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள கொண்ட சாமனஅள்ளியைச் சேர்ந்த முருகன் (44) ஆகிய 2 பேரும் நஞ்சாபுரம் பகுதியில் தாங்கள் வேலை செய்யும் பில்லப்பா என்பவரின் மாட்டு கொட்டகைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

வழியில் வடமாநில தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்தவாறு மது குடித்து கொண்டிருந்ததை பார்த்த பவன்குமார் எதற்காக சாலையில் அமர்ந்து மது குடிக்கிறீர்கள் என கேட்டார். அப்போது போதையில் இருந்த வடமாநில தொழிலாளர்கள் 6 பேரும் சேர்ந்து பவன்குமாரையும், முருகனையும் சரமாரியாக தாக்கினார்கள்.

கத்தியால் குத்திக்கொலை

இதையடுத்து பவன்குமார் தனது செல்போன் மூலம் பில்லப்பாவுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பில்லப்பா, அவரது மகன் மஞ்சுநாத் (24), ஓசூரை அடுத்த மாவத்தூரை சேர்ந்த அருள் (23) ஆகிய 3 பேரும் அங்கு வந்தனர். பவன்குமார், முருகன், பில்லப்பா, மஞ்சுநாத், அருண் ஆகிய 5 பேரும் சேர்ந்து பிர்கேஷ், பிஜய்சிங், அரவிந்த் ஜாடவ், ராஜ்குமார் ஆகிய 4 பேரையும் சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி கத்தியால் குத்தினர்.

இதில் பிர்கேஷ், பிஜய்சிங் ஆகியோர் பலியாகினர். மேலும் அரவிந்த் ஜாடவ், ராஜ்குமார் ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து பவன்குமார், முருகன், பில்லப்பா, அவரது மகன் மஞ்சுநாத், அருண் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்