மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மணிமகுடம் சூட்டுகிறார்கள்; எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன்: சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பரபரப்பு பேச்சு
“எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். தற்போது மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மணிமகுடம் சூட்டுகிறார்கள்” என சாத்தூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜவர்மன் பரபரப்பாக பேசினார்.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராஜவர்மன் எம்.எல்.ஏ. (அ.தி.மு.க.) பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-
இந்த ஆட்சி நீடிக்குமா என்று நினைத்த எதிர்க்கட்சியினர் மூக்கில் விரல் வைக்கும் அளவிற்கு முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் இரட்டை குழல் துப்பாக்கியாக ஆட்சியையும், கட்சியையும் வழிநடத்தி வருகின்றனர். சாத்தூர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த எதிர்க்கோட்டை சுப்பிரமணியம் மாற்று முகாம் சென்றார். அவர் மாற்று முகாம் போகக் கூடிய அளவிற்கு தள்ளப்பட்டார். அந்த அளவிற்கு இடைஞ்சல் இருந்தது. கட்சிக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று நினைத்து அவர் செல்லவில்லை. அவருடைய செயல்பாட்டை முடக்கினார்கள். அதனால் அவர் மாற்று முகாம் சென்றார்.
இடையூறுகள்
இதனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்து இடைத்தேர்தலை இந்த தொகுதி சந்திக்க நேர்ந்தது. அந்த இடைத்தேர்தலில் நான் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக பொறுப்பேற்று ஒரு வருடம் 8 மாத காலம் ஆகிறது. எனக்கும் சில இடையூறுகள் வந்தன. இதுகுறித்து முதல்-அமைச்சரிடம் கூறினேன்..
இங்குள்ள அமைச்சர், மேலிடத்தில் கட்சிக்கு துரோகம் செய்தார்கள் என்று தவறாக சொல்லி, சாத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 3 அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள், 2 நகர செயலாளர்கள் ஆகியோரை அமைச்சரின் பரிந்துரையின் பெயரில் மாற்றி இருக்கிறார்கள். முதல்-அமைச்சரிடம் தவறான தகவல்களை விருதுநகர் மாவட்ட செயலாளர் சொல்லி, இங்கே இருக்கின்ற மாற்றுக்கட்சியினரை பொறுப்பாளர் ஆக்கியுள்ளனர்.
மாவட்ட செயலாளர் பதவி காலியாக இருந்த போது எனக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கிடைக்கவில்லை அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் இங்கே இருக்கிற உழைப்பாளிகள் என்ன தவறு செய்தார்கள்? இயக்கம் வளர உழைத்தது குற்றமா?
மணிமகுடம் சூட்டுகிறார்கள்
விருதுநகர் மாவட்டத்தின் நிலைமை என்னவென்று தலைமைக்கு நன்றாக தெரியும். ஆனால் ஒரு சிலர் இது தெரியாமல் தாறுமாறாக பேசிவருகின்றனர். என்றைக்கும் கால சக்கரம் ஒன்று போல் இருக்காது.
என்னை கொலை செய்து விடுவேன் என அமைச்சர் மிரட்டல் விடுத்து வருகிறார். இதற்கான அனைத்து ஆதாரமும் என்னிடம் உள்ளது. தி.மு.க.வுடன் மறைமுக தொடர்பு கொண்டு அ.தி.மு.க.வை சின்னாபின்னப்படுத்தி வருகிறார். மாற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு மணிமகுடம் சூட்டுகிறார்கள்.
எடப்பாடியாருக்கு சோதனையான காலத்தில் கையெழுத்திட்டு உறுதுணையாக நின்றவர்கள் பதவியில் இருக்கக்கூடாது என நினைப்பது என்ன நியாயம்? இதை ஏன் நான் கேட்கக் கூடாது? என் மீது தவறு இருந்தால் தலைமை என்ன நடவடிக்கை எடுத்தாலும் தலைவணங்கி ஏற்க தயார். சமயம் வரும்போது உங்களுக்கு இன்னும் சொல்ேவன். சிவகாசி, சாத்தூர், விருதுநகர் என எந்த தொகுதியில் அந்த அமைச்சர் போட்டியிட்டாலும் மக்கள் பாடம் புகட்டுவார்கள். தோல்விதான் கிடைக்கும்.
சசிகலா
எத்தனை ெகாலை மிரட்டல் வந்தாலும் பயப்பட மாட்டேன். அ.தி.மு.க.வுக்குள் சண்டை போடுவதற்காகவா நாம் இருக்கிறோம். இதைப்பற்றி எடுத்து கூறினால் உடனடியாக தி.மு.க.வுக்கு போய் விடுவார், சசிகலா வந்தால் அவர்களிடத்தில் போய் விடுவார் என கூறுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.