சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டம் பஸ்கள் ஓடாததால் பொதுமக்கள் அவதி
புதுவை அரசின் சாலைப் போக்குவரத்து கழக ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பஸ்கள் ஓடவில்லை. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
புதுச்சேரி,
புதுவை அரசின் சாலைப் போக்குவரத்து கழகத்தில் தனியார்மயத்தை அனுமதிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு ஊழியர்கள் கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அவ்வாறு தனியார் மயமானால் சாலைப்போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் 1000 ஊழியர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும் என்று வேதனை தெரிவித்துள்ளனர்.
இவர்களில் டிரைவர், கண்டக்டர் என 240 பேர் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் அல்லது தினக்கூலி ஊழியராக மாற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். காலையிலேயே பஸ்களை இயக்காமல் பணிமனை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக புதுவை பகுதியில் கோரிமேடு, வீராம்பட்டினம், கரையாம்புத்தூர், மதகடிப்பட்டு, வில்லியனூர், சேதராப்பட்டு, காலாப்பட்டு மற்றும் நகரப்பகுதிகளுக்குள் இயக்கப்படும் 40 அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. அவைகள் அனைத்தும் பணிமனையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களின் போராட்டம் காரணமாக வெளியூர் செல்லும் பஸ்களை இயக்க அதிகாரிகள் மாற்று ஏற்பாடுகளை செய்தனர். குறிப்பாக நிரந்தர ஊழியர்களை கொண்டு சென்னை, வேளாங்கண்ணி, காரைக்கால், விழுப்புரம் என நீண்ட தூரம் செல்லும் பஸ்களை இயக்கினார்கள்.
புதுவை பகுதியில் கிராமங்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் கிராமத்திலிருந்து நகரப்பகுதிக்கு வேலைக்கு வருவோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதன் காரணமாக தனியார் பஸ்களில் கூட்டம் சற்று அதிகமாக இருந்தது.