தென்காசி, நெல்லையில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்; சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தல்
சமையல் கியாஸ் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி, நெல்லை, தென்காசியில் தி.மு.க. மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை
நெல்லை அரசு சித்தா கல்லூரி முன்பு தி.மு.க. மகளிர் அணி சார்பில் நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர மகளிர் அணி அமைப்பாளர் சவுந்தரம் முத்துராஜ் தலைமை தாங்கினார். சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், விலை உயர்வை திரும்ப பெறக் கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மத்திய மாவட்ட தி.மு.க. செயலாளர் அப்துல் வகாப், லட்சுமணன் எம்.எல்.ஏ. ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர். ஆர்ப்பாட்டத்தில் சிலிண்டர்களுடன் பங்கேற்றவர்கள், மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். இதில் மகளிர் தொண்டரணி ரேவதி அசோக் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர். சேரன்மாதேவியில் மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தென்காசி
இதேபோன்று தென்காசி தி.மு.க. தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட மகளிர் அணி சார்பில், தென்காசி தாலுகா அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன் தலைமை தாங்கினார்.
மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி சங்கு கிருஷ்ணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.