மயானத்திற்கு நடைபாதை வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா

மயானத்திற்கு நடைபாதை வேண்டி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-22 00:26 GMT
கரூர்,

திங்கட்கிழமைதோறும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு குறைதீர்க்கும் நாள் கூட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு மாற்று ஏற்பாடாக கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் செலுத்த புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. அதில், பொதுமக்கள் மனுக்களை செலுத்தி வருகின்றனர். அந்த மனுக்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

கூட்டமாக மனு கொடுக்க வரும் பொதுமக்கள் தடுத்து நிறுத்தப்பட்டு அவர்களில் முக்கியஸ்தர்கள் மட்டும் மனு அளிக்க அனுமதிக்கப்படுகின்றனர்.

பாதை வசதி வேண்டி...

இந்தநிலையில் திங்கட்கிழமையான நேற்று, நெரூர் தென்பாகம் ஊராட்சி வேடிச்சிப்பாளையம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

பின்னர் அவர்கள், வேடிச்சிப்பாளையம் அம்பேத்கர் தெருவில் யாராவது இறந்தால் இறுதி சடங்கு செய்து புதைக்கவும், எரியூட்டவும் நடுவளையல் என்ற இடத்தில் மயானம் உள்ளது. ஆனால், மயானத்திற்கு செல்ல நடைபாதை வசதி இல்லை. இதனால், இறந்தவர் உடலை வாய்க்கால் வரப்புகளில் எடுத்து செல்ல வேண்டியுள்ளது. மழை காலத்தில் வாய்க்கால் வரப்பு சேறும்-சகதியுமாக மாறி விடுகிறது. ஆகவே, மயானத்திற்கு பாதை வசதி செய்து தர வேண்டும். மேலும், மயான பகுதியில் தண்ணீர் வசதி, சுற்றுச்சுவர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் சமரசப்படுத்தினர்.

அடிப்படை வசதிகள்

பூசாரிகள் முன்னேற்ற சங்கத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், பூசாரிகள் நலவாரியத்தை நடைமுறைப்படுத்த அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. குளித்தலை வட்டம், டி.மருதூர் கிராமம், பணிக்கம்பட்டி காலனியை சேர்ந்த பொதுமக்கள் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் 234 காலனி வீடுகள் உள்ளது. இப்பகுதிக்கு இதுநாள் வரை உரிய பாதை வசதியோ, குடிநீர் வசதியோ, தெருவிளக்கோ இல்லை. தூய்மை பணியாளர்கள் யாரும் சுத்தம் செய்ய வருவதில்லை. ஆண்டுதோறும் வீட்டு வரி செலுத்தி வருகிறோம். ஆகவே, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் என கூறியிருந்தனர்.

கீழப்பகுதி கிராமம், தரகம்பட்டி ஆதிதிராவிடர் காலனி பொதுமக்கள் சார்பில் கொடுத்த மனுவில், எங்கள் காலனியில் சுமார் 100 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தெருவில் பெண்களுக்கான தனி கழிப்பறை வசதி இல்லை. எனவே கழிப்பறை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என கூறியிருந்தனர்.

மேலும் செய்திகள்