திருவள்ளூரை அடுத்த திருமழிசையில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு; கணவர் படுகாயம்
மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து காயமடைந்த பெண் பலியானார். அவரது கணவர் படுகாயமடைந்தார்.
பெண் பலி
திருவள்ளூரை அடுத்த திருமழிசை காவல்சேரி பகுதியை சேர்ந்தவர் உமாபதி (வயது 64).இவர் நேற்று முன்தினம் தன் மனைவி விஜய சாமுண்டீஸ்வரி (55) என்பவரை அழைத்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வேலையின் காரணமாக திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அவர்கள் திருவள்ளூரை அடுத்த புட்லூர் முனீஸ்வரன் கோவில் அருகே வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி விழுந்ததில், கணவன் மனைவி இருவரும் காயமடைந்தனர். இருவரையும் அந்த வழியாக வந்த வாகன ஓட்டிகள் மீட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சு மூலம் திருவள்ளூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே விஜய சாமுண்டீஸ்வரி பரிதாபமாக இறந்து போனார். பலத்த காயமடைந்த உமாபதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நடந்த சம்பவம் குறித்து செவ்வாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
அதே போல் திருவள்ளூர் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் ஹரி ஷங்கர் (21). இவர் நசரத்பேட்டையில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 17-ந் தேதியன்று ஹரிசங்கர் வேலை முடிந்து தனது மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திருவள்ளூரை அடுத்த புதுச்சத்திரம் அருகே நிலைத்தடுமாறி கீழே விழுந்ததில், காயமடைந்தார். இதைக் கண்ட அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக சென்னை மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஹரி ஷங்கர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார். இது குறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஏகுமதுரை கிராமத்தை சேர்ந்த வாலிபர் நரேஷ்(22). அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர்கள் நரேந்திரன்(18), விஜய்(20) ஆகியோருடன் நாயுடுகுப்பம் கிராமத்தில் இருந்து ஒரே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். ஏகுமதுரை அருகே செல்லும் போது கட்டுபாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் மீது மோதியது.
இதில் வாலிபர் நரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது நண்பர்கள் 2 பேரும் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.