கர்நாடகத்தில் முன்அனுமதி பெறாமல் தொழில் தொடங்கும் திட்டம் முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்
கர்நாடகத்தில் முன் அனுமதி பெறாமல் தொழில் தொடங்கும் திட்டத்தை முதல்-மந்திரி எடியூரப்பா தொடங்கி வைத்தார்.
பெங்களூரு,
கர்நாடக அரசின் தொழில்துறை சார்பில் முன் அனுமதி பெறாமல் தொழில் தொடங்கும் வகையில் ஏ.பி.சி. என்ற திட்டம் தொடக்க விழா பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, அந்த திட்டத்தை தொடங்கி வைத்து பேசும்போது கூறியதாவது:-
கர்நாடகத்தில் இன்று (நேற்று) ஏ.பி.சி. திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி தொழில் தொடங்க முன்வரும் நிறுவனங்கள் பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்துவிட்டு, தொழில்களை உடனே தொடங்கலாம். பல்வேறு துறைகளை சேர்ந்த 15 தொழில்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். கர்நாடகத்தில் தொழில் நிறுவனங்களை தொடங்குவதற்கு தேவையான வசதிகளை ஏற்படுத்த உறுதி பூண்டுள்ளோம். அதன்படி கர்நாடகத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கர்நாடகத்தில் தொழில்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதற்கான சுற்றுச்சூழலை மாநில அரசு ஏற்படுத்தியுள்ளது. நில சீர்திருத்த சட்டத்தில் திருத்தம், தொழிலாளர் சட்டத்தில் திருத்தம், தானியங்கி உரிமம் புதுப்பித்தல், மத்திய ஆய்வு நடைமுறை போன்றவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொழில்துறை சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் கர்நாடகம் 100 சதவீதம் இலக்கை எட்டியுள்ளது.
புதிய தொழில்துறை சட்டத்தின்படி பிரமாண பத்திரத்தை மட்டும் தாக்கல் செய்துவிட்டு தொழில் நிறுவனங்கள் முன் அனுமதி பெறாமல் தொழில்களை தொடங்கலாம். அடுத்த 3 ஆண்டுகளில் அரசின் அனுமதிகளை பெற வேண்டும். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க முடிவு. இதுகுறித்து தொழில் முதலீட்டாளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம். முதலீட்டாளர்களை ஊக்குவிக்கவும், தொழில் செய்வதை எளிதாக்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு எடியூரப்பா பேசினார்.
இதில் துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், தொழில்துறை மந்திரி ஜெகதீஷ்ஷெட்டர், விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல், தொழில்துறை முதன்மை செயலாளர் கவுரவ்குப்தா, அந்த துறையின் கமிஷனர் குஞ்சன் கிருஷ்ணா கர்நாடக உதயோக் மித்ரா நிறுவன நிர்வாக இயக்குனர் ரேவண்ணா கவுடா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.