கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பாரபட்சம்: அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்

கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பாரபட்சம் காட்டுவதாக கூறி, அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-21 06:27 GMT
புவனகிரி,

புவனகிரி அருகே உள்ளது வயலபூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் தமிழக அரசின் சார்பில் விலையில்லா கறவை மாடுகள் வழங்கும் திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்யும் பணி நடந்தது. இதில் தகுதியான பயனாளிகளை தேர்வு செய்யாமல், வசதி வாய்ப்புகள் படைத்தவர்களை பயனாளிகளாக தேர்வு செய்து, அவர்களுக்கு கறவை மாடுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டதாக தெரிகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராமத்து மக்கள் நேற்று காலை பாரபட்சமாக செயல்படும் அதிகாரிகளை கண்டித்து புவனகிரி சாலையில் அமர்ந்து திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த புதுச்சத்திரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தகுதியானவர்களை சேர்க்க வேண்டும்

அப்போது, ஏழை-எளியவர்களுக்கு கறவை மாடுகளை வழங்காமல், வசதி வாய்ப்பு படைத்தவர்களுக்கு வழங்கும் வகையில் கணக்கெடுப்பு நடத்தி இருக்கிறார்கள். ஊராட்சி நிர்வாகம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது. அவர்களது செயல்பாடு கண்டனத்துக்கு உரியதாகும், எனவே தகுதியானவர்களை பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதையேற்று கிராம மக்கள் தங்களது மறியலை கைவிட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதுடன், பரபரப்பும் நிலவியது.

மேலும் செய்திகள்