9 இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்

சிவகங்கை மாவட்டத்தில் 9 இடங்களில் அம்மா மருத்துவ மினி கிளினிக்குகளை அமைச்சர் பாஸ்கரன் திறந்து வைத்தார்.

Update: 2020-12-21 05:55 GMT
சிவகங்கை,

கிராம பகுதிகளில் வசிக்கும் ஏழை, எளிய மக்கள் உடனடியாக மருத்துவ வசதி பெறுவதற்காக 2 ஆயிரம் மருத்துவ மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பின்னர் சமீபத்தில் மருத்துவ கிளினிக்கை அவர் தொடங்கி வைத்தார்.

இந்த திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் நேற்று 9 இடங்களில் அம்மா மருத்துவ மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. இதன் தொடக்கவிழா வெற்றியூர், மதகுபட்டி, கட்டாணிபட்டி, மாத்தூர், பச்சேரி, ராஜகம்பீரம், பிரமனூர், குமாரக்குறிச்சி, சிலுக்கபட்டி ஆகிய கிராமங்களில் நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார். மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் முன்னிலை வகித்தார். சுகாதார பணிகள் துணை இயக்குனர் ்யசோதாமணி வரவேற்று பேசினார்.

சிறப்பான திட்டங்கள்

விழாவில் கதர் கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் புதிய கிளினிக்குகளை திறந்து வைத்து பேசியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதாரண விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். அதனால் தான் ஏழை எளிய விவசாய மக்களுக்கு பயன்படும் வகையில் பல சிறப்பான திட்டங்களை அறிவித்து செயல்படுகிறார். நமது மாவட்டத்தில் கண்மாய்கள் தூர்வாரப்பட்டதால் அனைத்தும் நிரம்பியுள்ளன..இதனால் விவசாயம் செழித்து குடிநீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பொங்கலுக்கு ஆண்டு தோறும் வழங்கப்படும் தொகையை 1000-ல் இருந்து ரூ.2 ஆயிரத்து 500 ஆக உயர்த்தி வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கிராமப்புறங்களில் வசிக்கும் மக்களும் உடனடி மருத்துவ வசதி பெற வேண்டும் என்பதற்காக இந்த மினிகிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. நமது மாவட்டத்தில் 36 இடங்களில் மினிகிளினிக்குகள் தொடங்கப்படவுள்ளது.மக்களின் தேவைகள் நிறைவேற்ற நாங்கள் எப்போதும் ஒதுங்கி நின்றதில்லை.தற்போது கூட ரூ.1,800 கோடியில் குடிநீர்திட்டம் செயல்படுத்த டெண்டர் விடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அம்மா ெபட்டகம்

பின்னர் 90 கர்ப்பிணிகளுக்கு சத்துணவு பொருட்கள் அடங்கிய அம்மா பெட்டகத்தை அமைச்சர் வழங்கினார். விழாவில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் செந்தில்நாதன், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கருணாகரன், மாவட்ட ஊராட்சி தலைவர் பொன் மணிபாஸ்கரன், துணைத்தலைவர் சரஸ்வதி, ஆவின் சேர்மன் அசோகன், பாம்கோ சேர்மன் ஏ.வி.நாகராஜன், இந்து சமய அறநிலையதுறை தலைவர் சந்திரன், கூட்டுறவு அச்சக தலைவர் சசிகுமார், கல்லல் தெற்கு ஒன்றிய செயலாளர் சேவியா்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்