2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி

வருகிற 2021 சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும் என்று கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

Update: 2020-12-21 05:23 GMT
கடத்தூர்,

கோபியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தையல் தொழிலாளர்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்க பேரவை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் காளியப்பன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.2,500

தமிழக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த அரசு பொதுமக்களுக்கு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்காக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி சாதனை படைத்தார்.

பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்தியாவில் முதன் முதலாக குரல் கொடுத்தவர் ஜெயலலிதா தான். தமிழக முதல்- அமைச்சர் பொங்கல் பரிசாக ரூ.2 ஆயிரத்து 500 வழங்குவதற்கு உத்தரவிட்டு உள்ளார். இதைப்பார்த்து எதிர்கட்சிகள் வியந்து போய் உள்ளன. நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதே இந்த அரசின் கொள்கையாக உள்ளது. இருப்பினும், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்விற்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரிசி ரேஷன் அட்டை

சர்க்கரை குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் ரேஷன் அரிசி அட்டையாக மாற்ற 21-ந் தேதி (அதாவது இன்று) கடைசி நாள் ஆகும். எனவே சர்க்கரை ரேஷன் அட்டையை அரிசி ரேஷன் அட்டையாக மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான் பொங்கல் பரிசுகள் கிடைக்கும். தமிழகம் அமைதியாகவும், மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும் திகழ்கிறது.

இங்கு தொழில் தொடங்க அனைத்து கட்டமைப்பு வசதிகளும் இருப்பதால், முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளனர். இன்னும் 6 மாத காலத்தில் 5 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

பேட்டி

இதைத்தொடர்ந்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘தமிழகத்தில் கிராமங்கள் தோறும் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளை உருவாக்கி இந்த அரசு சாதனை படைத்துள்ளது. 2021-ல் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தான் ஆட்சியை பிடிக்கும். மீண்டும் முதல்- அமைச்சராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்பார்’ என்றார்.

இதில் மாநில வர்த்தக அணி செயலாளர் சிந்து ரவிசந்திரன், மாவட்ட ஆவின் தலைவர் காளியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்