டிராக்டர் மோதி மாணவன் சாவு: டிரைவரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல் நாமக்கல்லில் பரபரப்பு

மோகனூர் அருகே டிராக்டர் மோதி பள்ளி மாணவன் இறந்த சம்பவத்தில் டிரைவரை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் நாமக்கல்லில் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-21 02:26 GMT
நாமக்கல்,

நாமக்கல் அருகே உள்ள ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் வடிவேல். கட்டிட தொழிலாளி. இவரது மகன் கீர்த்திவாசன் (வயது 7). இவன் அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 2-ம் வகுப்பு படித்து வந்தான்.

நேற்று முன்தினம் அங்குள்ள சாலையோரம் விளையாடி கொண்டிருந்த கீர்த்திவாசன் மீது டிராக்டர் ஒன்று மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவனை அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே கீர்த்திவாசன் பரிதாபமாக இறந்தான்.

இதையடுத்து அவனது உடல் பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டு இருந்தது. இதுதொடர்பாக வடிவேல் கொடுத்த புகாரின் பேரில் மோகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சிறுவனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடிய டிராக்டர் டிரைவரை கைது செய்யும் வரை சிறுவனின் உடலை வாங்க மாட்டோம் என கூறி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

உறவினர்கள் சாலைமறியல்

திடீரென அவர்கள் இதே கோரிக்கையை வலியுறுத்தி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீஸ் அதிகாரிகள் தப்பியோடிய டிரைவரை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் நாமக்கல்-மோகனூர் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன், ஆஸ்பத்திரிக்குள் செல்லும் புறநோயாளிகளும் அவதி அடைந்தனர். இந்த சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்