கொரோனா வைரஸ் தடுப்பு நெறிமுறைகளை அனைத்து கல்லூரிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

தமிழக அரசு வகுத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நெறிமுறைகளை அனைத்து கல்லூரிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி அறிவுறுத்தினார்.

Update: 2020-12-21 02:21 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 7-ந் தேதி முதல் வகுப்புகள் தொடங்கியது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் மேற்கொள்வது குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது.

கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி தலைமை தாங்கினார். இதில் கல்லூரி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

கொரோனா தடுப்பு பணிகள்

அனைத்து கல்லூரிகளிலும் கொரோனா வைரஸ் தடுப்பு பணிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு தினமும் உடல் வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும். கல்லூரி வளாகத்தில் கிருமி நாசினிகள் தெளிக்க வேண்டும். மாணவ, மாணவிகள் ஒரே இடத்தில் அமர்வதை தடுக்க வகுப்பறைகளை பல்வேறு பிரிவுகளாக பிரித்து பாடங்களை நடத்திடலாம்.

மேலும், கல்லூரிக்கு வருகை தரும் அனைவரும் கட்டாயம் முக கசவம் அணிய வேண்டும். கல்லூரி நுழைவுவாயில் மற்றும் வளாகத்தில் பல்வேறு இடங்களில் கை சுத்தம் செய்வதற்கான வசதிகள் செய்து தர வேண்டும். கல்லூரி வளாகத்தில் எச்சில் துப்புவதை அனுமதிக்க கூடாது. அனைத்து விடுதி மாணவர்களும் ஒரே நேரத்தில் உணவு அருந்துவதை தவிர்க்க குறிப்பிட்ட கால இடைவெளியில் உணவு வழங்குமாறு நேரத்தை மாற்றியமைக்க வேண்டும். தமிழ்நாடு அரசு வகுத்துள்ள கொரோனா வைரஸ் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அனைத்து கல்லூரிகளும் தவறாமல் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்