மருமகள் தற்கொலை வழக்கில் கைது: திருவள்ளூர் சிறையில் இருந்த முதியவர் ‘திடீர்’ சாவு உறவினர்கள் சாலை மறியல்

பள்ளிப்பட்டு அருகே மருமகள் தற்கொலை வழக்கில் கைதாகி திருவள்ளூர் சிறையில் இருந்த முதியவர் திடீரென ஏற்பட்ட உடல்நலக்குறைவால் இறந்தார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-21 01:10 GMT
பள்ளிப்பட்டு, 

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு ஆஞ்சநேய நகரைச் சேர்ந்தவர் பத்ரய்யா. இவரது மகள் திவ்யா (வயது 23). இவருக்கும் பள்ளிப்பட்டு அருகே கர்லம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் (64) என்பவரது மகன் சந்திரபோஸ் (33) என்பவருக்கும், கடந்த 22 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.

இவர்களுக்கு குழந்தை இல்லாததால், கணவர் சந்திரபோஸ் குடும்பத்தினர் திவ்யாவிற்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அவர் கடந்த 14-ந் தேதி வீட்டில் மர்மமாக இறந்து கிடந்தார். இதையடுத்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 16-ந்தேதி திவ்யா இறந்த வழக்கில் அவரை தற்கொலைக்கு தூண்டியதாக கணவர் சந்திரபோஸ், மாமனார் பெருமாள், மைத்துனர் வீரபிரதாப் சிங் ஆகியோரை போலீசார் கைது செய்து திருவள்ளூர் கிளைச்சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை சிறையில் இருந்த பெருமாளுக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவரை சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இந்த தகவலை அறிந்த அவரது உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் பெருமாள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது மரணத்திற்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டுமென்று பள்ளிப்பட்டு-சோளிங்கர் மாநில நெடுஞ்சாலையில் உள்ள கா்லம்பாக்கம் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் கிடைத்ததும் பள்ளிப்பட்டு போலீசார் விரைந்து சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களை சமரசம் செய்து சாலை மறியலை கைவிட செய்தனர். அதன் பிறகு போக்குவரத்து தொடங்கியது. இதனால் அந்த பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர், பெருமாளின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்