அரசூரில் பகுதிநேர ரேஷன் கடை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்

அரசூரில் பகுதிநேர ரேஷன் கடையை அமைச்சர் காமராஜ் திறந்து வைத்தார்.

Update: 2020-12-21 00:59 GMT
மன்னார்குடி,

மன்னார்குடி அடுத்த சவளக்காரன் ஊராட்சி அரசூரில் பகுதிநேர ரேஷன்கடையை அமைச்சர் காமராஜ் திறந்துவைத்தார். இதற்கான விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ஜெயராமன், மன்னார்குடி உதவி கலெக்டர் புண்ணியகோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் அமைச்சர் பேசுகையில், ‘திருவாரூர் மாவட்டத்தில் 3 லட்சத்து 75 ஆயிரத்து 583 குடும்ப அட்டைதாரர்களுக்கு 579 முழுநேர ரேஷன் கடைகளும், 146 பகுதிநேர ரேஷன் கடைகளும், 125 நடமாடும் ரேஷன் கடைகளும் செயல்பட்டு வருகின்றன’ என கூறினார்.

இதில் மாவட்ட வழங்கல் அலுவலர் லதா, ஒன்றியக்குழு தலைவர் மனோகரன், முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தமிழ்ச்்செல்வன், முன்னாள் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் பொன்வாசுகிராமன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர்கள் கலியபெருமாள், உதயகுமாரி தமிழ்கண்ணன், ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதாஅருள்ராஜன், மாவட்ட அண்ணாதொழிற்சங்க துணைத்தலைவர் மூவை.வீரமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கோரிக்கை மனு

முன்னதாக வாக்கோட்டை, வடக்கட்டளை ஆகிய இடங்களில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும். வடகோவனூரை மையமாககொண்டு அம்மா மினி கிளினிக் திறக்க பரிந்துரை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றியக்குழு துணைத்தலைவர் வனிதா அருள்ராஜன் அமைச்சர் காமராஜிடம் மனு அளித்தார்.

கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மடிக்கணினி

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு மடிக்கணினி வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். விழாவில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு 373 கிராம நிர்வாக அதிகாரிகளுக்கு ரூ.90 லட்சத்து 36 ஆயிரத்து 74 மதிப்பில் மடிக்கணினிகளை வழங்கினார்.

அதைத்தொடர்ந்து 2020-ம் ஆண்டுக்கான நன்நூலகர் விருதினை அம்மையப்பன் பகுதியை சேர்ந்த குமாரி என்பவருக்கு வழங்கினார். இதேபோல் மீன்வளத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்டவற்றின் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார். அப்போது கூடுதல் கலெக்டர் கமல்கிஷோர், மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர்கள் பாலசந்திரன், புண்ணியகோட்டி, தாசில்தார் நக்கீரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்