டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 600 மதுபாட்டில்கள் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை

சோமரசம்பேட்டை அருகே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 600 மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.

Update: 2020-12-21 00:37 GMT
ஜீயபுரம்,

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகில் உள்ள வியாழன் மேட்டில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் விற்பனையாளர் ராஜா, நேற்று முன்தினம் இரவு விற்பனை நேரம் முடிந்ததும், கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார். பின்னர் நேற்று காலை கடையை திறப்பதற்காக அவர் வந்தார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் கடையின் மேற்பார்வையாளருக்கு தகவல் கொடுத்தார்.

600 மதுபாட்டில்கள் திருட்டு

உடனே அவர் இதுபற்றி சோமரசம்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், கடையின் பூட்டை உடைத்த மர்ம ஆசாமிகள், கடையின் உள்ளே இருந்த 11 பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 600 மதுபாட்டில்களை திருடிச்சென்றது தெரியவந்தது.

திருட்டு போன மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் ஆகும். ேநற்று முன்தினம் மது விற்பனை செய்த தொகையை கடையில் வைக்காததால் அந்த தொகை தப்பியது. இந்த சம்பவம் குறித்து கடையின் மேற்பார்வையாளர் ஆறுமுகம் கொடுத்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுபாட்டில்களை திருடிச்சென்ற மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்