மோகனூர் அருகே, டிராக்டர் மோதி பள்ளி மாணவன் சாவு - டிரைவருக்கு வலைவீச்சு
மோகனூர் அருேக டிராக்டர் மோதி பள்ளி மாணவன் இறந்தான். டிராக்டர் டிரைவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மோகனூர்,
மோகனூர் அருகே உள்ள ஆண்டாபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (வயது 36). கட்டிட மேஸ்திரி. இவருடைய மகன் கீர்த்திவாசன் (7), அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தான். இந்தநிலையில் நேற்று மாலை ஆண்டாபுரத்தில் இருந்து மோகனூர் செல்லும் சாலையில் கீர்த்திவாசன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது ஆண்டாபுரத்தில் இருந்து மோகனூர் நோக்கி வந்த ஒரு டிராக்டர் எதிர்பாராதவிதமாக சிறுவன் மீது மோதியது. இதில் கீழே விழுந்த அவன் மீது பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. ஆனால் டிராக்டர் டிரைவர் வாகனத்தை நிறுத்தாமல் பயத்தில் அங்கிருந்து சென்று விட்டார். விபத்தில் பலத்த காயம் அடைந்த சிறுவன் கீர்த்திவாசனை அங்கிருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவனை பரிசோதித்த டாக்டர்கள சிறுவன் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து சிறுவனின் உடல் ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து வடிவேல் மோகனூர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி மாணவன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற டிராக்டர் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பள்ளி மாணவன் மீது டிராக்டர் மோதி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.