நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை தொடங்கியது
நாமக்கல் வாரச்சந்தையில் கரும்பு விற்பனை தொடங்கி உள்ளது.
நாமக்கல்,
நாமக்கல்- திருச்செங்கோடு சாலையில் வாரச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு காய்கறிகள் மற்றும் வீட்டிற்கு தேவையான அனைத்து வகையான பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சந்தை சனிக்கிழமை தோறும் கூடும். நேற்று இந்த சந்தையில் கரும்பு அதிக அளவில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு இருந்தது. இவற்றை சந்தைக்கு வந்த பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.
இதுகுறித்து கரும்பு வியாபாரி சேவகன் கூறியதாவது:-
பள்ளிபாளையம், ஜமீன்இளம்பள்ளி, ஈரோடு பகுதிகளில் இருந்து கரும்பை விற்பனைக்கு வாங்கி வருகிறோம். இந்த ஆண்டு கரும்பு விளைச்சல் அதிகரித்து இருப்பதால் அதன் விலை சற்று குறைந்து உள்ளது.
கடந்த ஆண்டு ஜோடி ரூ.100-க்கு விற்பனை செய்யப்பட்ட கரும்பு இந்த ஆண்டு ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல் சிறிய அளவிலான கரும்புகள் ஒரு ஜோடி ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சற்று விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
சமீபத்தில் பெய்த புயல், மழைக்கு கரும்பு பயிர்கள் சாய்ந்தது குறிப்பிடத்தக்கது.