கூடலூரில், சாலையோர பள்ளத்தில் சரக்கு லாரி கவிழ்ந்தது - லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார்
கூடலூரில் சாலையோர பள்ளத்தில் சரக்கு லாரி கவிழ்ந்தது. இதில் லேசான காயத்துடன் டிரைவர் உயிர் தப்பினார்.
கூடலூர்,
மைசூருவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு தேங்காய்கள் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்று கொண்டு இருந்தது. அப்போது கோழிப்பாலம் பகுதியில் வளைவான சாலையோர 8 அடி ஆழ பள்ளத்தில் சரக்கு லாரி திடீரென கவிழ்ந்தது. மேலும் லாரிக்குள் டிரைவர் லேசான காயத்துடன் சிக்கினார்.
அப்போது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து லாரிக்குள் சிக்கியிருந்த டிரைவரை மீட்டனர். இதனால் அவர் உயிர் தப்பினார். இதேபோல் லாரி கவிழ்ந்து வாகனங்கள் சீராக செல்ல முடியாமல் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கூடலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
இதுகுறித்து வாகன டிரைவர்கள், பொதுமக்கள் கூறியதாவது:-
கூடலூர் கோழிப்பாலம் பகுதியில் தடுப்புகள் இல்லாததால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் தடுப்புகள் அமைக்கப்படவில்லை. கடந்த காலங்களில் சரக்கு லாரிகளின் நீளம் குறைவாக இருந்தது. தற்போது இயக்கப்படும் சரக்கு லாரிகளை நீளம் அதிகமாக உள்ளது. இதனால் மறைவான இடங்களில் லாரியை இயக்க முடியாமல் டிரைவர்கள் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் விபத்து ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.