காட்பாடி அருகே பயங்கரம்; பிறந்தநாள் விருந்தில் ராணுவ வீரர் கத்தியால் குத்திக்கொலை; நண்பர்கள் 2 பேர் படுகாயம்
காட்பாடி அருகே நண்பர்களுடன் மது அருந்தி பிறந்தநாள் கொண்டாடிய ராணுவ வீரர் மர்மநபர்களால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மற்ெறாரு ராணுவ வீரர் உள்பட 2 பேர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
ராணுவ வீரர்கள் மது விருந்து
வேலூரை அடுத்த காட்பாடி ஜாப்ராபேட்டையைச் சேர்ந்தவர் சங்கர். இவருடைய மகன் யோகராஜ் (வயது 23). அதே ஊரை சேர்ந்தவர் தீபக் (23). ராணுவ வீரர்களான இருவரும் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் பணியாற்றி வந்தனர். யோகராஜ் கடந்த 10 நாட்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். அதேபோல் தீபக்கும் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்தார்.
நேற்று முன்தினம் யோகராஜின் பிறந்தநாள் என்பதால் அவரிடம் தீபக் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அவருடைய நண்பர் நேதாஜி (23) ஆகியோர் மதுவிருந்து கேட்டுள்ளனர்.
அதன்படி அன்று இரவு கழிஞ்சூர் ரெயில்வே கேட் அருகே யோகராஜ் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது 3 பேரும் மது குடித்தனர். இரவு 12 மணிக்கு மேல் மது தீர்ந்து விட்டதால் மேலும் மது வாங்குவதற்காக கழிஞ்சூர் ரெயில்வேகேட் அருகே கள்ளத்தனமாக மது விற்பவர்களிடம் சென்றனர்.
கும்பல் மோதல்
அப்போது மது வாங்க வந்த மற்றொரு கும்பலுக்கும் யோகராஜ் தரப்பினருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த அந்த கும்பல் யோகராஜ், தீபக், நேதாஜி ஆகியோரை கத்தியால் சரமாரியாக குத்தினர். இதில் யோகராஜ் ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே சரிந்தார்.
தீபக், நேதாஜி ஆகிேயாரும் படுகாயம் அடைந்து துடிதுடித்தனர். இந்த சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் 3 பேரையும் குத்திய கும்பல் அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
ரத்த வெள்ளத்தில் கிடந்த 3 பேரையும் போலீசார் மீட்டு வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே யோகராஜ் இறந்து விட்டார்.
அதை தொடர்ந்து தீபக், நேதாஜி இருவரும் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பிறந்த நாளன்று ராணுவ வீரர் யோகராஜ் கத்தியால் குத்திக்கொல்லப்பட்ட சம்பவமும் அவரது 2 நண்பர்கள் குத்தப்பட்டதும் கழிஞ்சூர் பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
2 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கழிஞ்சூர் பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்தவர்களிடம் அங்கு வந்து மது வாங்கி குடித்தவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் சம்பவம் குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து வேலூர் சத்துவாச்சாரியை சேர்ந்த விஜயகுமார் (வயது 26), வினோத் குமார் (21) ஆகிய 2 வாலிபர்களை கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அஜய் என்ற வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.