விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்யக்கூடாது காங்கேயம் தாசில்தாரிடம் விவசாயிகள் மனு
காங்கேயம் அருகே, விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்து அளவீடு செய்யக்கூடாது என்று காங்கேயம் தாசில்தாரிடம் விவசாயிகள் மனு கொடுத்துள்ளனர்.
காங்கேயம்,
விருதுநகரில் இருந்து குன்னத்தூர், காவுத்தாம்பாளையம் பகுதி வரையில் 765 கே.வி. மின்பாதை அமைப்பதற்கு முதற்கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு்ள்ளது. இதற்கான படியூர் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் உயர் மின்கோபுரம் அமைப்பதற்கு அளவீடு செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். இதற்கு விவசாய நிலங்களின் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் எதிர்ப்பை மீறி அதிகாரிகள் விவசாய நிலங்களில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, படியூர் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காங்கேயம் தாசில்தாரிடம் புகார் அளித்தனர்.
போராட்டம் நடத்தப்படும்
அந்த புகாரில் “ விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைந்தால், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். கால்நடை வளர்ப்பதிலும் சிக்கல் ஏற்படுவதோடு, வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். எனவே, நெடுஞ்சாலையோரத்தில் கேபிள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும். முறையான அனுமதி இல்லாமல், அதிகாரிகள் விவசாய நிலங்களுக்கு வரக்கூடாது. அதையும் மீறி வந்தால், போராட்டம் நடத்தப்படும்” என கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, காங்கேயம் தாசில்தார் விவசாயிகளிடம், இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையாக தகவல் தெரிவிக்கப்படும் என்றார்.
அப்போது தமிழ்நாடு மின்பகிர்மான கழக காங்கேயம் துணை தாசில்தார் ராஜேந்திரபூபதி, திட்டத்தின் உதவிப் பொறியாளர் சந்திரசேகரன், தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் சிவக்குமார், முத்து விஸ்வநாதன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.