திருப்பூரில், ரூ.37¾ கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி திறந்துவைத்தார்

திருப்பூரில் ரூ.37¾ கோடியில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலி காட்சி மூலமாக திறந்துவைத்தார்.

Update: 2020-12-20 04:57 GMT
திருப்பூர், 

திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டுகள் மற்றும் மாற்றுமுறை தீர்வு மையம் ஆகியவை அமைக்க திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நீதித்துறைக்கு 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த கோர்ட்டுகள் கட்டுவதற்கு கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி அடிக்கல் நாட்டினார். அதைத்தொடர்ந்து பணிகள் தொடங்கப்பட்டு தற்போது ஒருங்கிணைந்த கோர்ட்டு கட்டிமுடிக்கப்பட்டது.

ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் மாற்றுமுறை தீர்வு மையம் ஆகியவை ரூ.37 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதில் 18 கோர்ட்டுகள், அவற்றின் அலுவலகங்கள், கோப்புகள் வைப்பறை, சொத்துகள் வைப்பறை, பயிற்சி மண்டபம், கூட்ட அரங்கம் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளது.

தலைமை நீதிபதி

புதிதாக அமைக்கப்பட்ட திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தின் திறப்பு விழா நேற்று காலை திருப்பூர் புதிய கோர்ட்டு வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வந்திருந்தவர்களை திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி அல்லி வரவேற்றார். பொதுப்பணித்துறை முதன்மை பொறியாளர் ரவி திட்ட அறிக்கையை வாசித்தார்.

சென்னையில் இருந்தபடி ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி காணொலி காட்சி மூலமாக திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு மற்றும் மாற்றுமுறை தீர்வு மையம் ஆகியவற்றை திறந்துவைத்தார்.

நீதியை நிலைநாட்ட வேண்டும்

அதனைத்தொடர்ந்து அவர் பேசியதாவது:-

ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் அமைய வேண்டும் என்று கோரிக்கை வைத்து அதன் அடிப்படையில் தற்போது புதிதாக கோர்ட்டு வளாகம் சிறப்பாக கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகளுக்கு புதிதாக புத்தகம் கிடைத்தால் ஏற்படும் மகிழ்ச்சியை போல் புதிய கட்டிடம் கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாவட்ட கோர்ட்டுகளில் நூலகங்கள் செயல்பட்டு வருகிறது. அனைத்து கோர்ட்டுகளில் நூலகங்கள் இருப்பது அவசியம். தமிழக அரசு பட்ஜெட்டில் நீதித்துறைக்கு கோர்ட்டு மேம்பாட்டுக்காக ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதை ரூ.1 கோடியே 50 லட்சமாக உயர்த்த வேண்டும். நீதித்துறையில் நேர்மையாகவும், நியாயமாகவும் நீதியை நிலைநாட்ட நீதிபதிகள் சிறப்புடன் பணியாற்ற வேண்டும். வக்கீல்கள் நூலகங்களுக்குச் சென்று புத்தகங்களை படிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

சேமநல நிதி உயர்வு

சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலமாக ஐகோர்ட்டு நீதிபதி வினித் கோத்தாரி, மதுரையில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஐகோர்ட்டு நீதிபதி சுவாமிநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். திருப்பூரில் நடந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதி கிருஷ்ணகுமார், திருப்பூர் மாவட்ட பொறுப்பு நீதிபதியும், ஐகோர்ட்டு நீதிபதியுமான வைத்தியநாதன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.

விழாவில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் பேசும்போது, “நீதித்துறைக்கு தேவையானதை தமிழக அரசு செய்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகம் மற்றும் மாற்றுமுறை தீர்வு மையம் அமைக்கப்பட்டு திறப்பு விழா நடந்து இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தமிழக அரசு வக்கீல்களின் குடும்ப சேமநல நிதியை ரூ.7 லட்சமாக உயர்த்தி வழங்குகிறது. இளம் வக்கீல்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஊக்க நிதி வழங்கி விடுகிறது” என்றார். முடிவில் திருப்பூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி பிரிஷ்னவ் நன்றி கூறினார்.

கலந்துகொண்டவர்கள்

விழாவில் திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன், திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல், எம்.எல்.ஏ.க்கள் குணசேகரன், விஜயகுமார், கரைப்புதூர் நடராஜன், திருப்பூர் பார் அசோசியேசன் தலைவர் பழனிசாமி, திருப்பூர் அட்வகேட் அசோசியேசன் தலைவர் சி.பி. சுப்பிரமணியம், திருப்பூர் மாவட்ட கோர்ட்டு வக்கீல் சங்க தலைவர் பக்தபிரகலாதன், திருப்பூர் மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் கே.என். சுப்ரமணியம், வேலுமணி, சத்தியநாராயணன், முருகேசன், பரிமளா, ரூபன், ஜோதி ரங்கசாமி, சித்ரா, பொன்னுசாமி, ராமகிருஷ்ணன், வக்கீல் கோபிநாத், மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், அரசு வக்கீல்கள், அ.தி.மு.க. வக்கீல்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்