கோவை மாநகரில் இந்த ஆண்டு நகை பறிப்பு வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் கைது; போலீஸ் அதிகாரி தகவல்
கோவை மாநகரில் இந்த ஆண்டு நடந்த நகை பறிப்பு வழக்குகளில் 80 சதவீத குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.
நகை பறிப்பு
கோவை மாநகர பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்களை தடுக்க சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் போலீசாருக்கு சவால்விடும் வகையில் நகை பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில் கோவை மாநகர பகுதிகளில் இந்த ஆண்டு கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 51 நகை பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து கோவை மாநகர போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
கூடுதல் போலீசார்
கோவை மாநகர போலீஸ் கிழக்கு உட்கோட்டத்துக்கு உட்பட்ட சிங்கா நல்லூர், சரவணம்பட்டி, பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு உள்ளிட்ட பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க ஆயுதப்படையில் இருந்து ஒவ்வொரு போலீஸ் நிலையத்துக்கும் கூடுதலாக தலா 10 போலீசார் வீதம் நியமித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் குற்றச்சம்பங்கள் நடப்பது தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது.
தற்போது தெற்கு உட்கோட்டம் ராமநாதபுரம், செல்வபுரம், போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் நிலைய பகுதிகளில் நகை பறிப்பு சம்பவங்கள் அதிகளவு நடந்து வருகின்றன. அதில், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படும் போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ்நிலைய பகுதிகளில் தான் அதிகளவு நகை பறிப்பு உள்பட குற்றச்சம்பவங்கள் நடந்து வருகின்றன.
51 வழக்குகள் பதிவு
அதை தடுப்பதற்காக போத்தனூர், குனியமுத்தூர் போலீஸ் நிலையங்க ளுக்கு கூடுதலாக தலா 10 போலீசார் நியமிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. கோவை மாநகர பகுதிகளில் நடப்பு ஆண்டில் இதுவரை 51 நகை பறிப்பு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அதில் 80 சதவீதம் வழக்குகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து நகை மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக் கப்பட்டு உள்ளன. மீதமுள்ள வழக்குகளில் தொடர்பு உடையவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கடந்த 2 ஆண்டுகளில் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு நகை பறிப்பு சம்பவங்கள் 50 சதவீதம் குறைந்து உள்ளது. பொதுமக்கள் வெளியே செல்லும்போது நகை வெளியே தெரியாதவாறு துணியால் மூடி செல்ல வேண்டும். தனியாக செல்லும் பெண்கள் தங்களை யாரும் பின்தொடர்ந்து வருகிறார்களா? என்பைதை பார்த்து செல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.