இரவிபுத்தன்துறையில் பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கிய ரேஷன் அரிசி, மண்எண்ணெய் பறிமுதல்
இரவிபுத்தன்துறையில் பாழடைந்த கட்டிடத்தில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசி, 1,400 லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது. 3 மூடை கொண்டைக்கடலையும் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கொல்லங்கோடு,
நித்திரவிளை அருகே உள்ளது இரவிபுத்தன்துறை மீனவ கிராமம். இங்குள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்தில் ரேஷன் அரிசி மற்றும் படகிற்கு மானிய விலையில் வழங்கக்கூடிய மண்எண்ணெய் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி நித்திரவிளை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. அதைதொடர்ந்து நித்திரவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ஜாஸ்லின் மற்றும் போலீசார் இரவிபுத்தன்துறைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது கோவில்விளாகம் பகுதியில் உள்ள ஒரு பாழடைந்த கட்டிடத்துக்குள் 1 டன் ரேஷன் அரிசி மற்றும் கொண்டை கடலையும் பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் சோதனை நடத்திய போது, மீனவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்தும் படகுகளுக்கு தமிழக அரசால் மானிய விலையில் வழங்கக்கூடிய மண்எண்ணெய் 39 கேன்களில் சுமார் 1400 லிட்டர் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இவற்றை கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
3 மூடை கொண்டைக்கடலை
அதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் மண்எண்ணெய, கொண் டைக் கடலை ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு சென்று, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
பாழடைந்த வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, தமிழக அரசால் ரேஷன் கடைக்கு அரசு முத்திரையிட்டு வழங்கிய சாக்குப்பையுடன் சிக்கி உள்ளது. எனவே கடத்தல் காரர்களிடம் ரேஷ் அரிசி மூடைகள் பிரிக்காமல் வந்தது எப்படி என்ற கேள்வியும் எழுந்து உள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மக்களுக்காக தற்போது வழங்கப்படும் கொண்டை கடலையும் 3 மூடை சிக்கி உள்ளது. அவற்றில் சுமார் 20 கிலோ கொண்டை கடலை இருக்கும். எனவே ரேஷன் அரிசி, மண்எண்ணெயுடன், கொண்டை கடலையையும் கடத்த முயன்றவர் யார்? என்பது குறித்தும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.