பொறையாறு பகுதியில் உப்புநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் அழுகின நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

பொறையாறு பகுதியில் உப்புநீர் புகுந்ததால் நெற்பயிர்கள் அழுகின. நிவாரணம் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;

Update: 2020-12-20 02:30 GMT
பொறையாறு, 

நாகை மாவட்டத்தில் புயல் காரணமாக பெய்த கன மழையால் பொறையாறு, தரங்கம்பாடி, காழியப்பநல்லூர், காட்டுச்சேரி, தில்லையாடி, திருவிடைக்கழி, செம்பனார்கோவில், பரசலூர், கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், கீழ்மாத்தூர், மேமாத்தூர், நல்லாடை, விளக்கம், கொத்தங்குடி, அரசூர், இலுப்பூர், சங்கரன்பந்தல், விசலூர் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் சம்பா நடவு செய்த வயல்களில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கியது.

இதனால் விவசாயிகள் மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் கடல் சீற்றத்தால் பொறையாறுக்கு கிழக்கே ராஜீவ்புரம், கீழமேட்டுப்பாளையம், நண்டலாறு சோதனை சாவடி பகுதிகளில் உப்புநீர் புகுந்து, நெற்பயிர்கள் அழுகின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்கடையூர்

இதேபோல திருக்கடையூர் பகுதியில் சமீபத்தில் பெய்த மழையினால் சம்பா சாகுபடி செய்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.

கடந்த 12 நாட்களாக நெற்பயிர்களை மூழ்கி இருந்த தண்ணீர் தற்போது வடிய தொடங்கிய நிலையில், தற்போது தொடர்ந்து இரண்டு நாட்களாக திருக்கடையூர், டி.மணல்மேடு, கண்ணங்குடி, கிள்ளியூர், பிள்ளை பெருமாநல்லூர், அன்னப்பன்பேட்டை, கிடங்கல், காலமநல்லூர், ஆக்கூர், மடப்புரம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் நெற்பயிர்கள் மேலும் பாதிப்படைந்து சாய்ந்து விட்டன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்