இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை; நெல்லை கலெக்டர் விஷ்ணு தகவல்

இயற்கை முறையில் பயிர் சாகுபடி விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது என நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தெரிவித்துள்ளார்.

Update: 2020-12-20 02:30 GMT
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

இயற்கை பயிர் சாகுபடி
நெல்லை மாவட்டத்தில் 2020-2021-ம்் நிதியாண்டில் தோட்டக்கலை பயிர் சாகுபடியில் இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில், இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் இயற்கை முறையி்ல பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஒரு ஹெக்டருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்.

மேலும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ் இயற்கை முறையில் கீரை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு அதிகபட்சமாக ஹெக்டருக்கு ரூ.2,500-ம், தக்காளி, கத்தரி, வெண்டை வகை பயிர்களுக்கு அதிகபட்சமாக ரூ.3,750 வரையும் ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும் இயற்கை முறையில் சாகுபடி செய்யும் விவசாயிகளை அங்ககசான்று பெற ஊக்குவிக்கும் வகையில் அதிகபட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.500 மானியமாக வழங்கப்படும்.

காய்கறி விவசாயிகள்
நெல்லை மாவட்டத்தில் சுமார் 17557 ஹெக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்கள் பயிரிடப்பட்டு வருகிறது. இதில் வெறும் 800 ஹெக்டேர் பரப்பளவில் மட்டுமே காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. எனவே காய்கறி பயிர்களின் பரப்பை அதிகரிக்கும் ேநாக்கத்தில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தமிழக அரசு சிறப்பு திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது.

தேசிய தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் காய்கறி பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி நெல்லை மாவட்டத்தில் வெங்காயம், தக்காளி, கத்தரி, முருங்கை, வெண்டை, அவரை, கீரை மற்றும் கொடி வகை காய்கறிகள் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள் காய்கறி பயிர்களை சாகுபடி செய்வதற்கு கொள்முதல் செய்த விதைகளுக்கான விலை பட்டியல், கிாம நிர்வாக அலுவலரிடம் இருந்து பெறப்பட்ட அடங்கல் மற்றும் சாகுபடி செய்யப்பட்ட நிலத்தினுடைய விவசாயியின் ஆதார் எண், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகிய விவரங்களுடன் வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயி சாகுபடி மேற்கொண்ட பரப்பின் அடிப்படையில் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை அதாவது ரூ.5 ஆயிரம் வரை ஊக்கத்தொகை பெறலாம்.

மேலும் விவரங்களுக்கு அம்பை- 98431 44501, சேரன்மாதேவி- 97863 56114, களக்காடு- 99949 05739, நாங்குநேரி- 89034 31728, பாப்பாக்குடி- 90472 47441, பாளையங்கோட்டை- 89034 31728, மானூர்- 94889 70629, ராதாபுரம்- 97864 05852, வள்ளியூர்- 75983 92194 ஆகிய தொலைபேசி எண்களில் அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர்களை அணுகலாம்.

இ்வ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்