மராட்டியத்தில் இருந்து தூத்துக்குடிக்கு 2,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வருகை; தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக மராட்டியத்தில் இருந்து 2,500 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் நேற்று வந்தன.

Update: 2020-12-20 02:12 GMT
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கலெக்டர் செந்தில்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்த போது
சட்டமன்ற தேர்தல்
தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. இதற்கான ஆயத்த பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

தேர்தலுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைப்பது, தேர்தல் பணியாளர்களை தேர்வு செய்தல் போன்ற பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டசபை தேர்தலில் பயன்படுத்துவதற்காக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மராட்டிய மாநிலத்தில் இருந்து லாரிகள் மூலம் பலத்த பாதுகாப்புடன் நேற்று 
தூத்துக்குடிக்கு வந்து சேர்ந்தன.

கலெக்டர் ஆய்வு
அந்த எந்திரங்கள் தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டிடத்தில் பாதுகாப்பாக சேமித்து வைக்கப்பட்டன. அவைகளை மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்குப்பதிவு நடத்துவதற்கான வாக்குப்பதிவு எநந்திரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி தூத்துக்குடி மாவட்டத்துக்கு மராட்டிய மாநிலம் அகமத்நகர், ஒஸ்மனபாத், பீட் ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு உள்ளது. இதில் 2,500 வாக்குப்பதிவு எந்திரம், 2,410 கட்டுப்பாட்டு எந்திரம், 2,670 வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரம் ஆகியவை வரப்பெற்றுள்ளன. இதுமட்டுமல்லாமல் கடந்த தேர்தலின்போது பயன்படுத்தப்பட்ட 700 வாக்குப்பதிவு எந்திரம், 300 கட்டுப்பாட்டு எந்திரம், 300 வாக்குப்பதிவு சரிபார்ப்பு எந்திரம் ஆகியவை நமது 
மாவட்டத்தில் தயாராக உள்ளன. இவை அனைத்தும் காப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. மொத்தம் 1,603 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது வரப்பெற்றுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் போதுமானதாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது தேர்தல் பிரிவு தாசில்தார் ரகு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்தார்த்தன், வசந்தா மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்