துறையூர் அருகே பச்சை மலையில் தொடர் மழையால் 100 ஏக்கர் வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்
துறையூர் அருகே பச்சை மலையில் தொடர்மழையால் 100 ஏக்கர் வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்தன.
துறையூர்,
துறையூர் அருகே பச்சைமலை பகுதியில் வன்நாடு, கோம்பை ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மலைவாழ் மக்கள் சுமார் 100 ஏக்கர் பரப்பளவில் வெங்காய பயிர் சாகுபடி செய்திருந்தனர். கடந்த சில நாட்களாக புயல்காரணமாக பச்சைமலை பகுதியில் தொடர்ந்து மழை பெய்தது.
இதனால் பச்சை மலையில் உள்ள கிணறுகள் மற்றும் மலை குன்றுகளில் இருந்து நீர்வழிந்து ஓடுகிறது. இந்த நீர் வயலில் தேங்கியதால் வெங்காய பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டு உள்ளது.
நிவாரணம்
இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இதுபற்றி வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்தனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, பாதிக்கப்பட் விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுபற்றி அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, பச்சை மலையில் இருந்து விளைவிக்கும் பொருட்களை ஏற்றிக்கொண்டு திருச்சிக்கு சென்று விற்பது எங்களுக்கு பெறும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. எனவே எங்கள் பகுதியிலேயே நாங்கள் விளைவிக்கும் பொருட்களை கொள்முதல் செய்ய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்றும், தற்போது பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனர்.