வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன் சொல்கிறார்

வாக்குகளை பிரிக்கவே புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது என இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

Update: 2020-12-20 01:11 GMT
புதுச்சேரி, 

புதுச்சேரியில் நேர்மை அரசியலை முன்னெடுத்து செல்லவும், கம்யூனிஸ்டு கட்சிகளின் பீகார் சட்டசபை தேர்தல், கேரளா உள்ளாட்சி தேர்தல் வெற்றி அரசியல் விளக்க பொதுக்கூட்டம் சுதேசி காட்டன் மில் அருகில் நடந்தது. கூட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ராஜாங்கம், லெனினிஸ்டு கட்சி செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில செயலாளர் முத்தரசன், முன்னாள் எம்.பி. டி.கே.ரங்கராஜன், லெனினிஸ்டு கட்சி தலைமை குழு உறுப்பினர் சங்கர் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் பேசியதாவது:-

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி டெல்லியில் 23 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்தை பிளவுபடுத்த முயற்சிகள் நடக்கிறது. அவர்களுக்கு ஆதரவாக தமிழகம், புதுச்சேரியில் நேற்று (நேற்று முன்தினம்) போராட்டம் நடந்தது.

நீதிமன்றம், தேர்தல்துறை, வருமான வரித்துறை உள்ளிட்டவைகளுக்கு தனித்தன்மை உள்ளது. ஆனால் அவை அனைத்தும் மத்திய அரசின் பேச்சை கேட்டு நடக்கிறது. புதிய கட்சிகள் தொடங்க அனைவருக்கும் உரிமை உள்ளது. அவர்களுக்கு கொள்கை, லட்சியம் முக்கியம். தற்போது புதிய கட்சி தொடங்குபவர்கள் விருப்பப்பட்டு தொடங்குகிறார்களா? என்பது தெரியவில்லை. எதிர்க்கட்சிகளின் பலத்தையும், வாக்குகளை பிரிக்கவும் புதிய கட்சிகள் தொடங்கப்படுகிறது.

மத்திய அரசு கொண்டு வரும் திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு எதிராகவும், கார்பரேட்காரர்களுக்கு ஆதரவாகவும் இருக்கிறது. டெல்லி மக்களால் நிராகரிக் கப்பட்ட கிரண்பெடி இப்போது புதுவையை முழு அதிகாரத்துடன் ஆட்சி நடத்தி வருகிறார். புதுச்சேரியில் பெயருக்கு தான் நாராயணசாமி முதல்-அமைச்சராக உள்ளார். கவர்னராக உள்ள கிரண்பெடி நியாய விலை கடையை மூடிவிட்டார். அரிசி வினியோகத்தை தடுத்து நிறுத்திவிட்டார். அவருக்கு எதிராக வலுவான ஒரு போராட்டத்தை மேற்கொள்ள வேண்டும். கம்யூனிஸ்டு அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களின் விருப்பமும் அதுதான். நம்மால் நிச்சயம் நாட்டில் மாற்றத்தை உருவாக்க முடியும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி முன்னாள் அமைச்சர் விசுவநாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி பிரதேச குழு உறுப்பினர் முருகன், லெனினிஸ்டு மாவட்ட செயலாளர் புருஷோத்தமன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்