வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேச்சு
வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்போம் என நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் சார்பில் தலைமை தபால் நிலையம் எதிரே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மத்திய அரசின் கார்பரேட் கொள்கையை எதிர்த்தும், விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை திரும்ப பெறக்கோரியும், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகிளா காங்கிரஸ் மாநில தலைவி பஞ்சகாந்தி தலைமை தாங்கினார். இதில் மாநில தலைவர் ஏ.வி.சுப் பிரமணியன், வைத்திலிங்கம் எம்.பி. மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
அப்போது கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்தும், கோரிக்கை பதாகைகளை கையில் ஏந்தியும் மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள்.
கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
இந்தியாவில் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்தவுடன் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. கியாஸ் சிலிண்டருக்கு ஒரே மாதத்தில் ரூ.100 உயர்த்தப்பட்டுள்ளது. இது பெண்களுக்கு மிகப்பெரிய சுமையை ஏற்படுத்தி இருக்கிறது. இதை எதிர்த்துத்தான் காங்கிரஸ் கட்சி சார்பில் இந்தியா முழுவதும் போராட்டம் நடத்தப் படுகிறது.
மோடி அரசு விவசாயிகளுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதனால் விவசாயிகள் கார்பரேட் நிறுவனங்களிடம் கூலித் தொழிலாளியாக வேலை செய்யும் நிலை ஏற்படும். விவசாயிகளின் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் மோடி அரசு சிக்கித் தவிக்கிறது.
போராட்டத்தில் குளிர் தாங்காமல் 30 விவசாயிகள் உயிரிழந்து உள்ளனர். மத்திய அரசுக்கு இதுபற்றி எந்த கவலையில்லை. விவசாயிகளை தீவிரவாதிகள் என கூறுகிறார்கள். விவசாயிகளுக்கு ஆதரவான நமது போராட்டம் தொடரும். விவசாயிகளுக்கு எதிராக வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை புதுச்சேரியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இணைந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்போம். இவ்வாறு அவர் பேசினார்.