சென்னை விமான நிலையத்தில், துபாயில் இருந்து கடத்திய ரூ.87 லட்சம் தங்கம் பறிமுதல்; 5 பேர் கைது

துபாயில் இருந்து வந்திறங்கிய சிறப்பு விமானத்தில் கடத்தப்பட்ட ரூ.87½ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-12-20 01:01 GMT
5 பேரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கடத்தல் தங்கத்தை படத்தில் காணலாம்.
துபாய் சிறப்பு விமானம்
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் விமானத்தில் வந்திறங்கிய பயணிகளை கண்காணித்தனர்.

அப்போது சந்தேகத்திற்கு இடமாக இருந்த சென்னையை சேர்ந்த முருகானந்தம் மோகன் (வயது 38), காஞ்சீபுரத்தை சேர்ந்த நந்தகுமார் (28), ராமநாதபுரத்தை சேர்ந்த நொப்பர் (28), இர்ஷத் அலி (31), புதுக்கோட்டையை சேர்ந்த சதாம் உசேன் (25) ஆகிய 5 பேரை சுங்க இலாகா அதிகாரிகள் நிறுத்தி விசாரித்தனர்.

5 பேர் கைது
அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடமைகளை முழுமையாக சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்காததால் தனியறைக்கு அழைத்து சென்று அவர்களை சோதனை செய்தனர். 

அப்போது அவர்கள் அணிந்திருந்த உள்ளாடை மற்றும் கால் பாதம் ஆகியவற்றில் தங்கத்தை ஒட்டி மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து, 5 பேரிடம் ரூ.87 லட்சத்து 62 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 700 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தங்கத்தை யாருக்காக கடத்த முயன்றார்கள்? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்