சாத்தனூர் அணை திறக்காத நிலையில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழியும் சொர்ணாவூர் அணை

சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு பிறகு சொர்ணாவூர் அணை நிரம்பி வழிவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2020-12-20 00:56 GMT
பாகூர், 

ஏற்கனவே நிவர், புரெவி புயல் மழையால் புதுச்சேரியில் உள்ள ஏரிகள், குளங்கள், படுகை அணைகள், அணைக்கட்டுகள் நிரம்பி வழிந்தன. இந்தநிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில நாட்களாக பெய்த கன மழையால் ஏரி, குளங்களுக்கு மேலும் தண்ணீர் வந்தது. தாழ்வான பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.

சாத்தனூர் அணை திறக்கப்படாத நிலையில், கன மழையால் நீர்வரத்து வாய்க்கால்கள் வழியாக வந்த தண்ணீரால் 5 ஆண்டுகளுக்கு பிறகு சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவது பொதுமக்களையும், விவசாயிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கரையாம்புத்தூர் அடுத்த சொர்ணாவூர் கிராமத் தில் அணைக்கட்டு உள் ளது. பாகூர் விவசாயிகள் மற்றும் அதனை சுற்றியுள்ள புதுச்சேரி, தமிழக பகுதி விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த அணைக்கட்டு கட்டப்பட்டது.

பெரும்பாலும் சாத்தனூர் அணைக்கட்டு நிரம்பி வழியும் தருவாயில் அல்லது அணைக்கட்டு திறக்கப்படும் பட்சத்தில் தான் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வந்து சேருவது வழக்கம்.

ஆனால் தற்போது கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழை காரணமாக விளை நிலங்களில் இருந்து வெளியேறும் தண்ணீர் வாய்க்கால்கள் வழியாகவும், விழுப்புரம் மாவட்டம் தளவானூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமங்களுக்கு இடையே தென்பெண்ணையாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைக்கட்டு நிரம்பி வழிவதாலும் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு வினாடிக்கு சுமார் 1.20 கன அடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது.

இதனால் சொர்ணாவூர் அணைக்கட்டு சாத்தனூர் அணை திறக்கப்படாமலேயே 2015-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது நிரம்பி வழிகிறது. அணைக்கட்டில் வழிந்தோடும் தண்ணீரின் அழகை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கண்டு ரசிப்பதோடு, குளித்து மகிழ்ந்து வருகின்றனர். செல்பியும் எடுத்துச் செல்கின்றனர். இதையொட்டி பொதுப்பணித்துறை ஊழியர்கள் அங்கு 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சொர்ணாவூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் கிராம மக்களும் தண்ணீர் வருகையை கண்டு ரசித்து வருகின்றனர்.

இது குறித்து புதுச்சேரி பொதுப்பணித்துறை நீர்பாசன பிரிவு அதிகாரிகள் கூறும்போது, ‘தொடர்ந்து பெய்து வரும் கனமழையாலும், தளவானூர் அணைக்கட்டு நிரம்பி வழிவதாலும் சொர்ணாவூர் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. அணைக்கட்டில் மதகு திறக்கப்பட்டு பங்காரு வாய்க்கால் வழியாக தண்ணீர் வருகிறது. இதனால் பாகூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரிகளுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும், கோடைகாலத்தை சமாளிக்கவும் இது ஏதுவாக இருக்கும். தண்ணீர் வருகையால் பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்’ என்றனர்.

மேலும் செய்திகள்