வேலாயுதம்பாளையம் அருகே எலக்ட்ரீசியன் கொலை வழக்கில் நண்பர்கள் 5 பேர் கைது
வேலாயுதம்பாளையம் அருகே எலக்ட்ரீசியன் கொலை செய்யப்பட்ட வழக்கில், மது போதையில் தகராறு செய்ததால் தீர்த்து கட்டினோம் என கைது செய்யப்பட்ட அவரது நண்பர்கள் 5 பேர் வாக்கு மூலம் அளித்தனர்.
நொய்யல்,
திருச்சி அண்ணாநகர் புது மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரமேஷ் மகன் ரஞ்சித்குமார் (வயது27). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ரஞசித்குமார், கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் பகுதிக்கு வந்து தனியாக தங்கியிருந்து, எலக்ட்ரீசியன் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 17-ந்தேதி ரஞ்சித்குமார் தனது மோட்டார் சைக்கிளில் மூலிமங்கலம் பிரிவு சாலையில் இருந்து வந்து கொண்டிருந்தார். அப்போது 3 ேமாட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல், ரஞ்சித்குமாரை வழிமறித்து சரமாரியயாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இந்த கொலை சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரபாரதி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வந்தனர்.
5 பேர் கைது
இந்தநிலையில், நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் அதிரடி சோதனை செய்தனர். அப்போது அங்கு பதுங்கி இருந்தது ரஞ்சித்குமாரை கொலை செய்த கும்பல் என்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த 5 பேரையும் போலீசார் கைது செய்து, போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து, விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் வேலாயுதம்பாளையம் பகுதியை சேர்ந்த கலையரசன் (30), பிரசாத் (25)், கோகுல் (23), பிரசாந்த் (22), ஷேக்தாவூத் (25)் என்பது தெரியவந்தது.
மதுபோதையில் தகராறு
இதையடுத்து கைது செய்யப்பட்ட 5 பேரும் போலீசாரிடம் கூறியதாவது:- கடந்த 16-ந்தேதி எங்களது நண்பரான ரஞ்சித்குமாருடன் நாங்கள் ஒரு டாஸ்மாக்கடையில் ஒன்றாக அமர்ந்து கொண்டு மது அருந்தி கொண்டிருந்தோம். அப்போது ரஞ்சித்குமார் எங்களது குடும்ப பெண்களை பற்றி இழிவாக பேசினார். இதனால் எங்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த ரஞ்சித்குமார் உங்களை வெட்டிக் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் கடந்த 15-ந்தேதி மோட்டார் சைக்கிளில் வந்த ரஞ்சித்குமாரை வெட்டிக் கொலை செய்தோம் என்று கூறினர். இதையடுத்து போலீசார் அதனையே வாக்குமூலமாக பெற்று கொண்டனர். இந்த கொலை தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.