கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை முற்றுகை

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை முற்றுகையிடப்பட்டது.

Update: 2020-12-20 00:36 GMT
தொழிற்சாலை முற்றுகை
கருந்திட்டு துகள்கள்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் தனியாருக்கு சொந்தமான சமையல் எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையால் அருகே உள்ள புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் காற்று மற்றும் நீர் நிலைகளில் கடுமையான மாசு ஏற்படுகிறது.

மேலும் தொழிற்சாலையையொட்டி உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் மற்றும் கோவில் குளத்திலும் கருந்திட்டு துகள்கள் போல படிந்து காணப்படுகிறது. இதனால் புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் வசித்து வரும் கிராம மக்கள் மற்றும் கால்நடைகள் தொடர்ந்து நோய் தொற்றுக்கு ஆளாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

முற்றுகை போராட்டம்
இந்த நிலையில், ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி சுகுமாரன் தலைமையில் புதுகும்மிடிப்பூண்டி கிராம பொதுமக்கள் மேற்கண்ட தொழிற்சாலையை நேற்று (சனிக்கிழமை) காலை திடீரென முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஒன்றிய கவுன்சிலர்கள் மதன், மோகன், சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் போது தொழிற்சாலையால் வெளியேற்றப்படும் கரிதுகள்களை கொண்டு வந்து கைகளில் வைத்து நீட்டியவாறு பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து தொழிற்சாலை நிர்வாகத்தினர் சம்பவ இடங்களில் முழுமையான ஆய்வு செய்து கரிதுகள்கள் வெளியேறாமல் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், இதுவரை ஏற்பட்ட சுற்றுசூழல் மாசை சுத்தம் செய்து தருவதாகவும் உறுதி அளித்தனர். அதன்பின்னர் தங்களது 3 மணி நேர முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்