8 பேரை வேட்டையாடிய சிறுத்தைப்புலி சுட்டு கொல்லப்பட்டது
8 பேரை வேட்டையாடி கொன்ற சிறுத்தைப்புலியை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.;
மும்பை,
மராட்டிய மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் கர்மாலா பகுதியில் இந்த மாத தொடக்கத்தில் 9 வயது சிறுமி சிறுத்தைப்புலி தாக்கியதில் பலியானாள். அந்த சிறுத்தைப்புலி இதுவரை சுமார் 8 பேரை தாக்கி கொன்று இருந்தது. 4 பேர் காயமடைந்து இருந்தனர்.
சோலாப்பூர், பீட், அகமதுநகர், அவுரங்காபாத் மாவட்ட வனப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களை அந்த சிறுத்தைப்புலி தொடர்ச்சியாக தாக்கி வந்தது. இதனால் கிராம மக்கள் பீதியுடன் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.
எனவே மனிதர்களை வேட்டையாடி வந்த அந்த சிறுத்தைப்புலியை பிடிக்க பல முயற்சிகள் எடுத்தும் அது நடக்கவில்லை. இந்த நிலையில் அதனை சுட்டுக்கொல்ல வனத்துறையினருக்கு அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து சிறுத்தைப்புலியை தேடும் பணியில் கடந்த 2 வாரங்களுக்கு மேலாக வனத்துறையை சேர்ந்த பல குழுவினருடன் மாநில ரிசர்வ் படை போலீசாரும் ஈடுபட்டனர்.
இதன் பலனாக அந்த சிறுத்தைப்புலி நேற்று முன்தினம் மாலை கர்மாலா தாலுகா பிடார்காவில் உள்ள வாழை தோட்டத்திற்கு நுழைந்தது. தகவல் அறிந்து வனத்துறையினர் அங்கு சென்றனர். இதையடுத்து அவர்கள் மனிதர்களை வேட்டையாடி வந்த சிறுத்தைப்புலியை சுட்டு கொன்றனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், “ சிறுத்தைப்புலியை வாழை தோட்டத்தில் பார்த்தவுடன் மயக்க மருந்து செலுத்தி பிடிக்க முயற்சி செய்தோம். ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. எனவே கடைசியில் அது சுட்டு கொல்லப்பட்டது” என்றார்.
மனித வேட்டையாடும் சிறுத்தைப்புலி சுட்டுக்கொல்லப்பட்டதால் பல கிராம மக்கள் பயத்தில் இருந்து மீண்டு உள்ளனர்.