கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மகனை கட்டியணைத்து கண்ணீர்விட்ட தாய்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்ட மகனை அவனது தாய் கட்டியணைத்து கண்ணீர்விட்டு அழுதார். பின்னர் அவர் தனது மகன் மீட்கப்பட்டதால் தன்னுடைய உயிர் திரும்ப வந்திருப்பதாக கூறினார்.

Update: 2020-12-19 22:10 GMT
மங்களூரு, 

தட்சிணகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜ்ஜிரியை சேர்ந்தவர்கள் பிஜாாய்- சாரியா பாவகரடு தம்பதி. இந்த தம்பதிக்கு 8 வயதில் அனுபவ் என்ற மகன் உள்ளான். இந்த நிலையில் சம்பவத்தன்று சிறுவன் தனது தாத்தாவுடன் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் அவனை தாத்தா கண்முன்னே கடத்திச் சென்று இருந்தார்கள். அவனை விடுவிக்க ரூ.17 கோடியை மர்மநபர்கள் பேரம் பேசினர்.

இந்த நிலையில் கடத்தல்காரர்கள் 6 பேரை கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா மாஸ்தி பகுதியில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட சிறுவன் மீட்கப்பட்டான். இந்த நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் அனுபவ், போலீஸ் நிலையத்தில் வைத்து அவனது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.

அவனை அவரது தாய் சாரியா பாவகரடு கண்ணீர் மல்க தனது தோளில் தூக்கிப்போட்டு முத்தமழை பொழிந்தார். சிறுவன் அனுபவமும் தாயை கட்டியணைத்து முத்தமிட்டான். இந்த சம்பவம் அங்கு கூடியிருந்தவர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து சிறுவன் அனுபவ் கூறுகையில், கடத்தல்காரர்கள் என்னை கடத்தி சென்ற போது பயத்தில் இருந்தேன். அவர்கள் எனக்கு தேவையான அனைத்தும் கொடுத்தனர். ஆனால் நான் எதையும் எடுத்துக்கொள்ளவில்லை. ஒரு முறை மட்டும் தண்ணீர் குடித்தேன் என்றான்.

எனது வாழ்க்கை திரும்ப கிடைத்தது...

இதுபற்றி அனுபவின் தந்தை பிஜாய் கூறியதாவது:-
நாங்கள் இப்போது தான் மகிழ்ச்சியாக இருக்கிறோம். இதுவரை எனது வாழ்க்கையில் இப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை. இது முதல் முறை. எனது மகன் கடத்தப்பட்டது பற்றி புகார் கொடுத்ததும் போலீசார் தீவிரமாக செயல்பட்டு எனது மகனை மீட்டுள்ளனர்.

நான் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பிட் காயின் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறேன். இதை சட்டப்பூர்வ அனுமதியுடன் நடத்தி வருகிறேன். எனது மகனை கடத்திய நபர்கள் என்னிடம் ரூ.17 கோடி கேட்டு மிரட்டினர். மேலும் என்னிடம் கடத்தல்காரர்கள் நேரடியாக பேசவில்லை. தற்போது எனது மகன் எங்களுக்கு திரும்ப கிடைத்துவிட்டான். இதனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது மகன் திரும்ப கிடைத்ததால் எனது வாழ்க்கை திரும்ப கிடைத்தது போல் உணர்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

சம்பவம் பற்றி சிறுவனின் தாய் சாரியா கூறுகையில், எனது மகனை அவனது தாத்தா கண் முன்னே கடத்தல்காரர்கள் கடத்திச் சென்றனர். அவர் தடுக்க முயன்றார். ஆனால் 2 மர்மநபர்கள் அவரை தள்ளிவிட்டு எனது மகனை காரில் கடத்திச் சென்றனர். தற்போது எங்களது மகன் கிடைத்துவிட்டான். எனது உயிர் திரும்ப வந்துள்ளது. எனது மகனை பத்திரமாக மீட்க நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.

மேலும் செய்திகள்