ரூ.17 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவன், கோலாரில் மீட்பு 6 பேர் அதிரடி கைது

மங்களூருவில் ரூ.17 கோடி கேட்டு கடத்தப்பட்ட சிறுவனை போலீசார் கோலாரில் மீட்டனர். சிறுவனை கடத்திய 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

Update: 2020-12-19 22:06 GMT
மங்களூரு, 

தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகா உஜ்ரி ஆஷாவதகட்டே பகுதியை சேர்ந்தவர் பிஜாய். தொழில் அதிபர். இவருடைய மனைவி சாரியா. இந்த தம்பதியின் மகன் அனுபவ் (வயது 8). அனுபவின் தாத்தா சிவன். இவர் முன்னாள் ராணுவ வீரர் ஆவார். இந்த நிலையில் கடந்த 17-ந்தேதி சிவன் தனது பேரன் அனுபவை அழைத்து கொண்டு நடைபயிற்சி சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாா்.

அப்போது, அவர்கள் அங்குள்ள ஜனார்த்தன சுவாமி கோவில் மைதானம் பகுதியில் வந்தபோது அவர்களை வழிமறித்தபடி கார் ஒன்று வந்து நின்றது. அந்த காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், சிவனை தாக்கிவிட்டு சிறுவன் அனுபவை காரில் கடத்தி சென்றுவிட்டனர்.

இதையடுத்து சிறிது நேரத்தில் மர்மநபர்கள் சாரியாவின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு பேசினர். அப்போது, உனது மகன் உயிருடன் வேண்டும் என்றால் 100 பிட்காயின் அல்லது ரூ.17 கோடி கொடுக்க வேண்டும். இல்லை என்றால் உனது மகனை கொலை செய்து விடுவோம் என்று கூறிவிட்டு செல்போன் இணைப்பை துண்டித்து விட்டனர்.

இதற்கிடையே சிவன், தனது பேரனை மர்மநபர்கள் கடத்தி சென்றுவிட்டதாக பெல்தங்கடி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மர்மநபர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும், சாரியாவிடம் பேசிய மர்மநபர்கள் பற்றிய விவரங்களையும் போலீசார் சேகரித்து கொண்டனர். மர்மநபர்கள் கன்னடம் மற்றும் இந்தியில் அவரிடம் பேசியது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் மர்மநபர்கள் பேசிய செல்போன் எண்ணின் சிக்னலை வைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மேலும் மர்மநபர்களை பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. அப்போது மர்மநபர்கள் ஹாசனில் இருப்பது தெரியவந்தது. சிறிது நேரத்தில் மர்மநபர்கள் கோலாரில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மங்களூரு தனிப்படை போலீசார், கோலார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் ரெட்டியை தொடர்புெகாண்டு விவரங்களை தெரிவித்தனர்.

இதையடுத்து மர்மநபர்களின் செல்போன் எண் சிக்னலை வைத்து நடத்திய விசாரணையில், மர்மநபர்கள் கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா கூர்ணஒசஹள்ளியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோலார் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் மாலூர் போலீசார், கூர்ணஒசஹள்ளி பகுதியில் மர்மநபர்கள் பதுங்கி இருந்த வீட்டை சுற்றிவளைத்தனர்.

பின்னர் போலீசார், அந்த வீட்டில் மர்மநபர்களின் பிடியில் இருந்த சிறுவன் அனுபவை பத்திரமாக மீட்டனர். மேலும் அந்த வீட்டில் இருந்த 4 பேரையும் போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

இதுகுறித்து மாலூர் போலீசார் மங்களூரு தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மங்களூரு போலீசார் மாலூருக்கு விரைந்து சென்று சிறுவன் அனுபவை மீட்டனர். மேலும், சிறுவனை கடத்திய 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள், மண்டியாவை சேர்ந்த ரஞ்சித் (வயது 22), அனுமந்தா (21), மைசூருவை சேர்ந்த கங்காதர் (25), பெங்களூருவை சேர்ந்த கமல் (22) என்பது தெரியவந்தது.

மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த மாலூரை சேர்ந்த மஞ்சுநாத், மகேஷ் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். கைதான 6 பேரையும், மீட்கப்பட்ட சிறுவன் அனுபவையும் போலீசார் மங்களூருவுக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் சிறுவனை அவனது பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

கைதானவர்களிடம் நடத்திய விசாரணையில், அனுபவை கடத்துவதற்காக திட்டமிட்டு கடந்த 7-ந்தேதியில் இருந்து நோட்டமிட்டு வந்தது தெரியவந்தது. மேலும் 6 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சிறுவனை கடத்தி ரூ.17 கோடி கேட்டு மிரட்டிய மர்மநபர்களை துரிதமாக செயல்பட்டு பிடித்த தனிப்படை போலீசாருக்கு தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு லட்சுமி பிரசாத் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்