காத்திருப்பு போராட்டம் நிறைவடைந்தது: ஏர் கலப்பை, கரும்பு, நெல் பயிருடன் ஆர்ப்பாட்டம் - தொழில் அதிபர்கள் வேடத்தில் வந்தவர்களை சாட்டையால் அடித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு

ஈரோட்டில் நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஏர் கலப்பை, கரும்பு, நெல் பயிருடன் ஆர்ப்பாட்டம் செய்தபோது, தொழில் அதிபர்கள் வேடத்தில் வந்தவர்களை சாட்டையால் அடிப்பதுபோன்று நடித்து கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-12-19 16:33 GMT
ஈரோடு,

விவசாயிகளுக்கு விரோதமாக மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருப்பதாக, நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 3 வேளாண் சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி புதுடெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், விவசாயிகள், வணிகர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு அளித்து வருகிறார்கள்.

புதுடெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டது. அதன்படி ஈரோட்டில் கடந்த 14-ந் தேதி காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. 5-வது நாளாக தொடர் காத்திருப்பு போராட்டம் நேற்றும் நடந்தது. நேற்றைய போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் கட்சி, புரட்சிகர இளைஞர் முன்னணி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காத்திருப்பு போராட்டத்தின் தொடக்கத்தில் வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஆண்களும், பெண்களும் ஏர் கலப்பை, கரும்பு, நெல் பயிர்களை கையில் ஏந்தி கோஷங்கள் எழுப்பினார்கள். அப்போது போராட்டக்குழுவை சேர்ந்த 2 பேர் தொழில் அதிபர்கள் அம்பானி, அதானி பெயரை எழுதிக்கொண்டு வந்தனர். அதைத்தொடர்ந்து தொழில் அதிபர்களின் பெயர்களை கூறி அவர்களுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டன. அப்போது அங்கு இருந்த பெண்கள் சாட்டையால் தொழில் அதிபர்களை அடித்து துரத்துவதுபோல நடித்துக்கொண்டே கோஷம் எழுப்பினார்கள். இது பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் தொடர் காத்திருப்பு போராட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் கி.வே.பொன்னையன், சி.என்.துளசிமணி, சுப்பு, முத்துசாமி, அறச்சலூர் செல்வம், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர் மக்கள் ஜி.ராஜன், தி.மு.க. மாநகர இலக்கிய அணி துணை அமைப்பாளர் வீரமணி, தொண்டர் அணி அமைப்பாளர் திலகவதி, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரசன்னா, பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு கண.குறிஞ்சி, நிலவன், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள். புரட்சிகர இளைஞர் முன்னணியினர் ஊர்வலமாக வந்து போராட்ட களம் அருகே நின்று நீண்ட நேரம் கோஷம் எழுப்பினார்கள்.

5 நாட்களாக நடந்த தொடர் காத்திருப்பு போராட்டத்தை நேற்று மாலையுடன் நிறைவு செய்வதாக ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்தனர்.

இதைத்தொடர்ந்து 5 நாள் போராட்டம் முடிவுக்கு வந்தது.

மேலும் செய்திகள்