புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம் - கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்டு சார்பில் நடைபெற்றது

புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க கோரி கொரடாச்சேரியில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2020-12-19 15:37 GMT
கொரடாச்சேரி,

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து தொகுப்பு வீடுகளையும் ரூ.5லட்சம் செலவில் புதிய கான்கிரீட் வீடுகளாக கட்டித்தர வேண்டும். கூரை வீடுகள் அனைத்தையும் கான்கிரீட் வீடுகளாக மாற்றித்தர வேண்டும். பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். கொரோனா மற்றும் தொடர் மழையால் வேலை இழந்து உள்ள அனைவருக்கும் ரூ.10ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளி்ட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கொரடாச்சேரியில் கொட்டும் மழையில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சி விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணை தலைவர் பன்னீர்செல்வம், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் துரைகதிர்வேல், ஒன்றிய செயலாளர் கார்த்தி, விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் மணியன், ஒன்றிய துணை செயலாளர் அய்யப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜோசப், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவராஜ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். கொரடாச்சேரியில் காலையிலிருந்து பெய்யும் மழையை பொருட்படுத்தாமல் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்