சீர்காழி பகுதியில், 2 நாட்களாக தொடர் மழை: அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன - நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை

சீர்காழி பகுதியில் 2 நாட்களாக பெய்த தொடர்மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் சாய்ந்தன. நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Update: 2020-12-19 15:30 GMT
சீர்காழி,

நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவிற்கு உட்பட்ட சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், அகனி, கொண்டல் ஊராட்சிக்கு உட்பட்ட பத்தக்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, ஆதமங்கலம், பெருமங்கலம், கற்கோவில், கதிராமங்கலம், எடக்குடிவடபாதி, காரைமேடு, சட்டநாதபுரம், திட்டை, தில்லைவிடங்கன், செம்மங்குடி, விளந்திட சமுத்திரம், அத்தியூர், கடவாசல், எடமணல், புங்கனூர் உள்ளிட்ட ஊராட்சிகளில் விவசாயிகள் சம்பா சாகுபடி செய்திருந்தனர். இந்தநிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் தாழ்வான பகுதிகளில் சாகுபடி செய்த விளைநிலங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்தனர். இந்தநிலையில் மீண்டும் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் முற்றிலும் வயலில் சாய்ந்து விட்டது.

மேலும் மழைநீர் வடியாமல் தேங்கி உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயி ஒருவர் கூறுகையில், தொடர்ந்து மழை பெய்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் இந்த ஆண்டு கேள்வி குறியாகி விடும் என்றார்.

மேலும் செய்திகள்